மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

நெடுங்கடலைப் பாதுகாக்க ஐநாவின் உடன்பாடு!

நெடுங்கடலைப் பாதுகாக்க ஐநாவின் உடன்பாடு!

பூமியின் மிகப்பெரிய வளமும் பிரமாண்டமான சுற்றுச்சூழல் அமைப்புமான கடலை பாதுகாக்கும் சர்வதேச ஒப்பந்தத்துக்கான பேச்சு வார்த்தையை ஐநா சபை தொடங்கியது.

ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தப் பேச்சுவார்த்தையை வரும் 18ஆம் தேதி வரை நடத்தவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தை வரும் இரு ஆண்டுகளுக்கு நடைபெறும். அதன் பின்னர், 2020இல் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட பின்னர், அது நெடுங்கடலைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்பாடாக அறிவிக்கப்பட்டு அனைத்து நாடுகளினாலும் கையெழுத்திட்டு ஏற்புறுதி செய்யப்படும்.

ஐநாவின் கடல் சட்டம் இருக்கும்போது புதிதாக ஏன் இன்னொரு சட்டம் என்ற கேள்வி பலருக்கும் எழும். இன்றைய நிலையில் கடல் வளங்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் இருக்கிற சட்டம் போதாது என்பதால் மாறியுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப புதிய சட்டம் தேவைப்படுகிறது. கடல் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து கடல் சூழல் மிகவும் மாறி வருகிறது.

1982இல் ஐநா சபை கடல் சட்டம் குறித்த சர்வதேச உடன்பாட்டை (UN Convention on the Law of Sea -UNCLOS) இயற்றியது, ஆனால், அந்த உடன்பாடு 1994இல் இருந்து அமலுக்கு வந்தது. ஆனால் இந்த உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திடாமல் விலகிக்கொண்டது. இந்த உடன்பாடு தத்தம் நாடுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ள வழி வகுத்தது. அதற்காக முழுமையான பொருளாதார மண்டலம் என்பதையும் (Exclusive Economic Zone-EEC) வரையறுத்தது. 200 கடல் மைல் வரை (1 கடல் மைல் என்பது 1.82 கிமீ ஆகும்) ஒவ்வொரு நாடும் தத்தம் முழுமையான பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிப்பது சுரங்கம் தோன்றுவது உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இக்கடல் சட்டத்தில் ஒவ்வொரு நாடும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை மேலாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடல் சட்டம் சர்வதேச எல்லையைத் தாண்டிய கடல் பகுதிக்கு (12 கடல் மைல்கள்) பொருந்தாது என்பதால் கடல் வளங்களை கொள்ளையடிப்பதையும் அதன் அடியில் உள்ள கனிம வளங்களை சுரண்வதிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளும் பல பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் மிகுந்த ஆர்வம்காட்டினர். மேலும், கப்பல்களின் போக்குவரத்தும் அதிகரித்து அதற்கான கடல் வழிப்பாதைகளும் விரிவுபடுத்தப்பட்டன. இதனால் கடலில் மாசு அதிகரிக்கத் தொடங்கியது.

தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்ததால், கடல் தளத்திலுள்ள கனிம வளங்களை எடுக்க சுரங்கங்களே அமைக்கப்பட்டன. இதில் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு கடலின் அடித்தளத்தில் சுரங்கம் அமைத்து சுரண்ட ஆரம்பித்தன. இதனால் கடலின் சுற்றுச்சூழலில் விபரீதங்கள் உருவாகத் தொடங்கின. கடல் சூழலின் சம நிலை கடுமையாகப் பாதிப்படையத் தொடங்கியது. இவ்வளங்களை அடைவதில் நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுவதால் நாடுகளுக்கு மோதல் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகத் தொடங்கின. மேலும், கடலின் உயிரியல் சூழலும் குறிப்பாக கடல் வாழ் உயிரினங்கள் தொழிற்சாலை அடிப்படையில் (industrial fishing and over fishing) மீன் பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் பாதிக்கப்படத் தொடங்கியதாலும் இந்த உடன்பாடு உருவாக்கப்படுகிறது.

உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் நான்கு முக்கிய நோக்கங்கள் அடையப்பட உள்ளன. முதலாவது கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறையை உருவாக்குவது, அது தேசிய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும். அதாவது சர்வதேச எல்லையிலுள்ள கடல் பகுதியில் செயல்படும். நாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் நாடுகளுக்கு எந்த வகையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறையை உருவாக்கிக் கொள்வது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல கடல் வளங்களைப் பகிர்ந்துக் கொள்வதையும் வளரும் நாடுகள் தொழில் நுட்பங்களையும் திறன்களையும் பரிமாறிக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கம்போல் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் தனது உடன்பாட்டை தெரிவிக்காமல் காலந்தாழ்த்தி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

நீண்ட காலமாக சர்வதேச அளவில் மிகுந்த கவலைக்குரியதாக இருந்த கடல் சூழலின் நிலை அறிந்து சர்வதேச சமூகத்தினர் கடல் சூழலைப் பாதுகாக்க களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆதாரங்கள்:

1.UNEP Website.

2. UN Convention on Law of Seas.

சேது ராமலிங்கம்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon