மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

வங்கிக் கடனை அடைக்க முடியாது!

வங்கிக் கடனை அடைக்க முடியாது!

கடனைச் செலுத்தும் அளவுக்குத் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என நாட்டை விட்டுத் தப்பியோடிய மெஹுல் சோக்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த பிரபல நகை வியாபாரியான நீரவ் மோடி போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார். இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ள அவரை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த மாபெரும் மோசடியில் நீரவ் மோடிக்கு அவரது உறவினர் மெஹுல் சோக்சியும் உடந்தையாக இருந்துள்ளார். கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவரும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இவர் தற்போது ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டில் வசித்து வருகிறார்.

மோசடி கண்டறியப்பட்டு தலைமறைவாகிய பிறகு இப்போதுதான் முதன்முறையாக மெஹுல் சோக்சி ஊடகத்தின் முன்னிலையில் பேட்டியளித்துள்ளார். செப்டம்பர் 9ஆம் தேதி செய்தியாளர்களிடையே பேசிய அவர், ”இந்தியாவில் மோசடி செய்துவிட்டு தப்பிச்சென்ற நிறையப் பேரைப் பிடிக்க முடியாமல் இந்திய அரசு என்மீது குறிவைத்துள்ளது. நான்தான் அவர்களுக்கு மிகவும் எளிதான இலக்கு. நான் இப்போது குடியேறியுள்ள இந்த நாடு என்னைக் கண்டிப்பாகப் பாதுகாக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது, “எனது பிராண்டின் மதிப்பு இப்போது பூஜ்ஜியமாகிவிட்டது. நான் வைத்திருந்த அனைத்தையும் கைப்பற்றிவிட்டார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு என்னிடம் எதுவும் இல்லை. எனது சொத்துகளை விற்பனை செய்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்று பதிலளித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon