மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் மழை வாய்ப்பு!

காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் மழை வாய்ப்பு!

இரண்டு காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களிடம் பேசினார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது, இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். “வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில், மேற்குத் திசைக் காற்றில் தெற்கு கர்நாடகம் முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் கிழக்குத் திசை காற்றில் தெலங்கானா முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது.

இந்த இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அதாவது, 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெருமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை சிலமுறை லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கால் பகுதியில் 9 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 செ.மீ. மழையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரூர் பகுதியில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இதேபோல தருமபுரி, மதுரை, வேலூர், கரூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 3 முதல் ஒரு சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்தது. வெப்பநிலையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும்” என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon