மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

ஹோம் டெலிவரி: டெல்லிக்கு வழிகாட்டும் தமிழகம்!

ஹோம் டெலிவரி: டெல்லிக்கு வழிகாட்டும் தமிழகம்!

டெல்லி மாநிலத்தில், சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் உள்ளிட்ட 40 சேவைகளை வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்திருக்கிறார். உலகத்திலேயே இதுதான் முதல் தடவை என்றும் அவர் பெருமிதப்பட்டிருக்கிறார்.

ஆனால் வீட்டுக்கு வீடு என்று டெல்லியில் தொடங்கிவைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கும் தமிழ்நாடே முன்னுதாரணமாக இருக்கிறது.

டெல்லியின் மொபைல் நண்பர்

அரசு சான்றிதழ்கள் பெற வேண்டி பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால், அவர்களுக்கு பலமணி நேரம் வீணாவது வழக்கமாக உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாகவும் புகார்கள் உள்ளன. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த வருடம் நவம்பரில் வீட்டுக்கே வந்து சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. அத்திட்டத்திற்கு ‘மொபைல் சஹாயக்(மொபைல் நண்பர்)’ என்றும் பெயரிட்டது.

திட்டம் குறித்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பக்கத்தில் “டெல்லி வாழ் மக்களுக்கு வீட்டு வாசலுக்கே சேவைகள் கிடைக்கப் போகிறது. வீட்டுக்கே வரும் சேவையின் மூலம் ஊழலுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்களுக்கு மிகுந்து உதவியாக இந்தத் திட்டம் இருக்கப்போகிறது. உலகிலேயே இந்தத் திட்டம் டெல்லியில்தான் முதன் முதலாகச் செயல்படுத்தப்பட உள்ளது” என பதிவிட்டிருந்தார்.

டெல்லியில் இத்திட்டத்தை இன்று (செப்டம்பர் 10) தொடங்கி வைத்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுக்கு பீட்ஸா வந்து வழங்குவார்கள். இதைத்தான் இதுவரை கேள்விப்பட்டோம். ஆனால் நீங்கள் இப்போது அரசுக்கு தொடர்பு கொண்டால் அரசே உங்கள் வீட்டுக்கு வரும்”என்றார்.

இந்த சேவையின் மூலம் திருமணச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 சேவைகளை வீட்டிலிருந்தே பெறுவதற்கு ரூ.50 கட்டணமாகச் செலுத்தவேண்டியது இருக்கும். இந்தச் சேவைகளை பெறுவதற்கு 1076 என்ற வாடிக்கையாளர் எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்தால், பின்னர் மொபைல் சஹாயக் மையத்தில் இருந்து ஊழியர்கள் நேரடியாக வந்து விவரங்களைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த சேவைகள் யாவும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமை உட்பட. விஎப்எஸ் குளோபல் என்று நிறுவனம் இந்த சேவைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏஜென்சி மூலமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக கால் சென்டர்கள் டெல்லியில் நிறுவப்படவுள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், திருமண பதிவு, டூப்ளிகேட் ஆர்.சி., முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவையும் டெல்லி அரசின் சேவையில் இடம் பெற்றுள்ளது.

விஜயகாந்த் புள்ளியில் கெஜ்ரிவால் கோலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் கட்சி ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டில் இருந்து அவர் சந்தித்த ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும், “நான் ஆட்சிக்கு வந்தால் அரசின் சேவைகளை வீடு தேடி வந்து அளிக்க நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக தினந்தோறும் கூலி வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வேலைக்கு லீவு போட வேண்டியுள்ளது. அதனால் அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் பொருட்களை உங்கள் வீடு தேடி வந்து வழங்குவேன்” என்று வாக்குறுதி அளித்தார் விஜயகாந்த். இந்த வாக்குறுதி ஆங்கில செய்தி ஊடகங்களில் அப்போது சிலாகிக்கப்பட்டது.

விஜயகாந்த் வைத்த புள்ளியைத்தான் இன்று கோலமாக்கி டெல்லியில் போட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

ஜெயலலிதாவின் அம்மா திட்ட முகாம்!

அதுபோல, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் கடந்த 24.2.2013 அன்று அம்மா திட்டம் என்ற ஒரு திட்டம் வருவாய் துறை மூலம் துவக்கப்பட்டது. ’அனைத்து கிராமங்களுக்கும் சென்று அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்’ (Assured Maximum Service to Marginal People in All Villages) என்பதன் வார்த்தை சுருக்கம்தான் அம்மா திட்டம்.

இதன்படி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்),. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு குடிமைச் சான்றுகளுக்கு தங்கள் கிராமத்தை உள்ளடக்கிய வட்ட அலுவலகங்களுக்கும், மாவட்ட வருவாய் அலுவலகங்களுக்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது.

இதைமாற்றி வருவாய் துறை ஊழியர்கள் குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக சென்று முகாமிடுவார்கள். அந்த கிராமத்து மக்களின் அலைக்கழிப்பைத் தடுத்து அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களைக் கொடுத்து உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள். இந்தத் திட்டம் தமிழகத்தின் கிராமப்புற மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. பின் இது சென்னை போன்ற மாநகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

கிராமம் கிராமமாக தேடிச் செல்லும் இந்த அம்மா திட்டத்தின் அடுத்த கட்டம்தான் வீடு வீடாக சென்று அரசின் சேவைகளை வழங்குதல். அந்த வகையில் டெல்லிக்கு தமிழகம்தான் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சமூக நலத் திட்டங்களில் இந்தியாவுக்கும், இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கும் வழிகாட்டுவது தமிழ்நாடுதான்!

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon