மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: நடைமுறைக்கேற்ற பெரியாரியவாதி! (பாகம் 2)

சிறப்புக் கட்டுரை: நடைமுறைக்கேற்ற பெரியாரியவாதி! (பாகம் 2)

இளங்கோவன் ராஜசேகரன்

(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி)

இட ஒதுக்கீட்டுக் கொள்கை

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தினார். உருது பேசும் இஸ்லாமியர்களையும், கொங்கு வேளாளர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கொண்டுவந்தார். தற்போது முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டுக்கும் 1991ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வன்னியர்களுக்கும், சீர்மரபினருக்கும் 20 விழுக்காடு பிரத்யேக இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

எனினும், தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் பின்தங்கிய அருந்ததியர் சமூகத்தினருக்கு ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கியது அவரது சிறந்த சாதனைகளில் ஒன்று. அருந்ததியருக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று 2006ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு அமைப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார். ஆதித்தமிழர் பேரவை போன்ற பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. கோரிக்கையை ஏற்கும்பொருட்டு ஜனவரி 23, 2008 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அந்தக் கோரிக்கையை முதன்முறையாகக் கருணாநிதி இணைத்தார். நவம்பர் 27ஆம் தேதியன்று இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 12, 2009 அன்று இதைச் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் தனிச்சிறப்புடைய சட்டம் என்று மாநில அரசு அரசிதழில் பதிவு செய்தது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் தங்களது வார்டுகளில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆதித்தமிழர் பேரவையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் கூற்றுப்படி, 2008ஆம் ஆண்டில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் வெறும் 17 பேர் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுள்ளனர்; ஆனால், இட ஒதுக்கீட்டின் உதவியுடன் 2009ஆம் ஆண்டில் 86 இடங்கள் கிடைத்துள்ளன. பொறியியல் படிப்பில் 2008ஆம் ஆண்டில் 681 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன; 2009ஆம் ஆண்டிலே 4,000க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்துள்ளன. அரசுக் கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர் பொறுப்புகளிலும் அருந்ததியினருக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், “இப்போது அருந்ததியினருக்குக் கிடைத்துள்ள இடங்கள் மிக அதிகமாக இருக்க வேண்டும். ஒருவகையில் மற்றவர்கள் பொறாமைப்படக்கூடிய சாதனை” என்று கூறினார். தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு கோரியபோது, அவர்களை பட்டியலினத்தில் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.

சமூக நீதி அனைவரையும் சென்றடைவதற்காக சில புதிய துறைகளை கருணாநிதி உருவாக்கினார். அதில் குடிசை மாற்று வாரியம், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்டவை அடங்கும். ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் நியாய விலையில் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் உறுதி செய்துகொண்டது. அதேநேரத்தில் வேளாண் தொழிலாளர்களுக்கு அவர் நியாயமான ஊதியங்களை நிர்ணயித்தார்.

1996ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பல்வேறு நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. அதே காலத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள கால்வாய்கள், குளங்கள், ஆறுகளைத் தூர் எடுக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. அவையனைத்தையும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வந்தார். இதே காலத்தில்தான் பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அணைகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மாபெரும் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றன.

முதலமைச்சராக கருணாநிதியின் இரண்டாம் ஆட்சிக்காலத்திலும் (1971-76) பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்கள் தொடர்ந்தன. அப்போது, மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம், பயனற்ற நிலத்துக்கான வரி ஒழிப்பு (இதில் பெரும்பங்கு ஒதுக்கப்பட்டவர்களின் கையில் இருந்தது) போன்றவை அமல்படுத்தப்பட்டன. இக்காலத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்குச் சிறப்பான அழுத்தம் கொடுத்தார். சேலம் ஸ்டீல் ஆலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் போன்றவை இக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட இரு முக்கிய திட்டங்களாகும். சிட்கோ (சிறு ஆலைகள் மேம்பாட்டுக் கழகம்), சிப்காட் (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்) போன்றவை அமைக்கப்பட்டன. இதேகாலத்தில் பசுமைப் புரட்சியும் ஏற்பட்டது.

பெண்கள் நலம்:

கருணாநிதி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் (1989-91) பெண்களுக்கான நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வளர்ந்து வந்த ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் நோக்கில் பெண்களுக்கான திட்டங்களைத் தந்திரமாக வாரி இறைத்தார் என்பதை அரசியல் கண்காணிப்பாளர்கள் மறுக்க முடியாது. ஜெயலலிதா பிடிக்க நினைத்த அரசியல் மேன்மையை முன்கூட்டியே தவிர்க்கும் ஒரு முயற்சிதான் அவை. அரசுப் பணிகளிலும், பொதுத் துறை பணிகளிலும் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். அதன் விளைவாக மாநிலத்தின் வேலைவாய்ப்புகளின் தோற்றமே மாறியது. அரசு அலுவலகங்களில் ஆண்-பெண் வேலைவாய்ப்பு விகிதம் கணிசமாக சீரானது.

இந்து மரபுரிமைச் சட்டத்தில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தத்தின் வாயிலாக பெரியாரின் பல்லாண்டுக் கனவு நிறைவேறியது. அந்தச் சட்டத்திருத்தத்தின் விளைவாகப் பெண் குழந்தைகளுக்கும் சரிசமமான சொத்துரிமை கிடைத்தது. 8ஆம் வகுப்பு முடித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக ரூ.5,000 உதவித் தொகை வழங்கினார். அதன்படி தந்திரமாக பெண்களுக்குக் குறைந்தபட்ச கல்வி கிடைப்பதை உறுதி செய்தார். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மகப்பேறுகால உதவித் தொகையாக ரூ.200 வழங்கினார். ஏழை மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குழுக்களின் பெண்களுக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கினார். இதன் விளைவாகப் பல பெண்கள் பயனடைந்தனர். அதேபோல விதவை மறுமணத்துக்கான உதவித் தொகையாலும் பலர் பயனடைந்தனர்.

தலித் பெண்களுக்குப் பட்டப்படிப்பு வரையில் இலவசக் கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்றவை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகும். இவற்றால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் பயனடைந்தனர்.

1996ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் தமிழகத்தின் சிறப்பான ஆட்சிக்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சமூக சீர்திருத்தங்கள், சமூகநல மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கலவையாகத் தனது ஆட்சியில் வழங்கினார். இதில், ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கியது முக்கியமானதாகும். இதனால், மாதம் ரூ.300 வரை ஊதியம் பெறும் சுமார் 83 லட்சம் பேர் பயனடைந்தனர். பிற்காலத்தில் மாதம் ரூ.1000 வரை ஊதியம் பெறுவோருக்கு இத்திட்டத்தின் பயன்கள் சென்றடைந்தன. இத்திட்டத்தின் விளைவாக ஏழைக் குடும்பங்கள் அரிசிக்குச் செலவிடும் பணத்தைச் சேமித்து தங்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்தினர்.

முதலமைச்சராகத் தனது பதவிக்காலம் முழுவதும் மாநில நிதிகளுக்கும், நலத் திட்டங்களுக்கும் இடையே மிகச்சிறிய அளவிலான சமநிலையே இருந்தது. கடுமையாக மானியம் அளிக்கப்பட்ட அரிசித் திட்டம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அரசு தற்கொலை செய்துகொள்வது போன்றதாகும். இத்திட்டம் ஜூன் 3, 1989 அன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது கருணாநிதி பேசுகையில், இந்த சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் யாவும் வெறும் வலி நிவாரணிகள் மட்டுமே; நோய் தீர்வதற்கு நீண்டகாலப் பணி வேண்டும் என்று கூறினார். இத்திட்டங்கள் அனைத்தும் புதுமை வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், பின் தங்கிய குழுக்களின் சமூக வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமாக இருந்தன.

பின்னர் அத்திட்டத்தை ‘ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி’ திட்டம் என்று மாற்றியமைத்து தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். மேலும், இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதன் விளைவாக 2006-11 காலத்தில் திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. “திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலின் நாயகன்” என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரான ப.சிதம்பரம் கூறியிருந்தார். இக்காலத்தில், ரூ.7,000 கோடி மதிப்பிலான கூட்டுறவு கடன்களை அவர் தள்ளுபடி செய்தார். மேலும், நெல், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினார். இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளைக் காக்கும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அவர் தொடங்கினார். 1.58 கோடி குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் விளைவாக இரண்டு தலித் பெண்கள் மேயர்களாகப் பதவியேற்றனர். மதிய உணவுத் திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டதால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிட்டியது.

கல்விக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம்:

கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது உயர்கல்விக்கு உச்சபட்ச முக்கியத்துவத்தை வழங்கினார். பல மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கியதோடு, பல மாவட்டங்களிலுள்ள மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளையும் மேம்படுத்தினார். பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்குப் பலருக்கும் அனுமதியளிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை அவர் ஒழித்தார். மேலும், பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். மேலும், மக்கள்தொகை மற்றும் கல்வியறிவின் அடிப்படையில் கிராமங்களில் நூலகங்களை அமைத்தார்.

அக்காலத்தில் வலுவான தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்டது. பிரத்யேக தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கையை அவர் தயாரித்தார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஐடி பெருநிறுவனங்கள் இடத்துக்காக நெருக்கியடித்துக்கொள்ளும் அளவுக்கு ஐடி தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாகன உற்பத்தியிலும் தமிழகம் முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்தது. தமிழகத்துக்கு வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் படையெடுத்தன. வரி முறையும் எளிமையாக, முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு இருந்தது. மின்னணுப் பூங்காக்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்முனைவோர் மையங்கள் போன்றவை சென்னையில் மட்டுமல்லாமல், இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் அமைக்கப்பட்டு பெருமளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டன.

எப்போதும் போல திட்டங்களுக்கும், நிதிகளுக்கும் இடையே அவர் விசித்திர வித்தைகளைச் செய்துகாட்டினார். பொருளாதார விவகாரங்களில் செயலாற்றும்போது கருணாநிதி சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று அப்போது அவருடன் பணிபுரிந்த அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அவர் மென்மையாகக் கையாண்டார். ஏனெனில், சமூக நல அரசியலின் சிக்கல்களை அவர் அறிவார். ஒரு வலுவான பொருளாதாரத்தால் சமூக நலனைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், மற்ற திராவிட அரசுகள் இதுவரையில் வருமானத்தை உருவாக்கும் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கவில்லை.

பொருளாதார வரலாற்றாளரான ஆர்.எச்.தவ்னே, “வளங்களைப் பிரித்தளிப்பதற்குப் பொது செலவுகளை அதிகரிப்பதே சிறந்த வழி” என்று வாதிட்டுள்ளார். ஒரே நேரத்தில், முதலாளித்துவ முயற்சிகளையும், ஜனரஞ்சக (பாப்புலிஸ்ட்) திட்டங்களையும் எவ்வாறு கையாள வேண்டுமென்று கருணாநிதி தெரிந்து வைத்திருந்தார். தொழில் மயமாக்கலுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் வருவாயை அவர் சமமாகப் பிரித்திருந்தார். அதனால் மாநிலத்தின் பொருளாதாரம் என்றுமே பாதிக்கப்படாமல் இருந்தது.

சாதிய வேறுபாடுகளை ஒழிக்கும் நோக்கத்தில், மாநிலம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அவர் அறிமுகப்படுத்தினார். பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின் தங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்களை அரசு கண்டறிந்து, அவர்களுக்கு அத்தியாவசிய வசதிகளுடன் இலவச வீடுகளையும் ஒதுக்கியது. ஆகஸ்ட் 17, 1998 அன்று மதுரை மாவட்டத்தின் மேலக்கோட்டையில் மாநிலத்தின் முதல் சமத்துவபுரத்தை அறிமுகப்படுத்தும்போது கருணாநிதி பேசுகையில், “சமூகத்தின் அனைத்துக் குழுக்களையும் ஒரே சமுதாயமாக, ஒரே இனமாக நல்லுறவை வளர்த்தெடுப்பதே சமத்துவபுரத்தின் நோக்கம். தமிழ்நாடே ஒரு சமத்துவபுரமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். மாநிலம் முழுவதும் சுமார் 200 சமத்துவபுரங்களை அவர் துவங்கினார்.

அவர் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைகளால் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தியை நேரடியாக நுகர்வோரிடமே விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டது. வருமுன் காப்போம் திட்டத்தின் வாயிலாக, நோயுற்ற, ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான சுகாதார உதவிகள் வழங்கப்பட்டன. நமக்கு நாமே திட்டத்தால் பொதுமக்கள் தங்களது வட்டாரத்திற்குத் தேவையான மேம்பாட்டுப் பணிகளைத் தாமாகவே செய்துகொள்ள வழி செய்யப்பட்டது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தால் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.

அவரது கடைசி ஆட்சிக்காலத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ரூ.1,200 கோடி செலவில் பிரமாண்டமான சட்டமன்றத்துடன் கூடிய தலைமைச் செயலகம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அது தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிட்டது. ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டமைக்கப்பட்டது, மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது, இதர தொழிற்துறை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது அனைத்தும் அவரது ஆட்சிக்காலத்தில்தான். ஒவ்வொரு முறையும் அவர் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அகற்றப்பட்ட திட்டங்களைப் புதுப்பித்து, புத்துயிர் கொடுக்கும் பணியை அவர் செய்துவந்தார்.

இந்தச் சீர்திருத்தங்களின் மையப்புள்ளியில் சமூக நல எண்ணமே உள்ளது. சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான தனது தொடர் பயணத்தில் சமூக நலனை கருணாநிதி தக்கவைத்துக் கொண்டார். போட்டிமிக்க அரசியலில் தங்களது உருவத்தைப் பதித்துக் கொள்வதற்காக திராவிட தலைவர்கள் ஜனரஞ்சகத் திட்டங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அதை வைத்து மட்டும் பகுத்தறிவுக் கொள்கை போன்ற அவர்களது சித்தாந்த அர்ப்பணிப்பைத் தரம் தாழ்த்திவிட முடியாது. வளர்ச்சி மாநிலமாகவும், முற்போக்கு மாநிலமாகவும் விளங்கும் தமிழகத்துக்கு பகுத்தறிவுக் கொள்கை இன்றளவில் ஒரு தனித்துவ அடையாளத்தைக் கொடுத்துள்ளது.

பசியே இல்லாத ஒரு மாநிலத்தை உருவாக்குவது சாதாரணமான சாதனையல்ல. அதை உருவாக்குவதற்காகவே விதிக்கப்பட்டவர் முத்துவேல் கருணாநிதி. அதனால்தான் வரவிருக்கும் காலங்களிலும் அவர் தொடர்புடையவராக இருப்பார்.

நன்றி: ஃபிரன்ட்லைன்

தமிழில்: அ.விக்னேஷ்

முதல் பாகத்தைப் படிக்க

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon