மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 செப் 2018

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

மதுரையில் பறக்குமா  சீமராஜா கொடி?

சிவகார்த்தி மார்கெட்: களநிலவரம் ஒரு அலசல் - 2

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி தமிழ் சினிமா விநியோகத்தில் MR ஏரியா எனக் குறிப்பிடப்படுகிறது. MR ஏரியா வியாபாரத்தில் செங்கல்பட்டு, கோவை ஏரியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ளது

தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்ததும், திருப்புமுனையை உண்டாக்கியதும் மதுரையில் தான். தமிழகத்தை ஆண்ட மூன்று முதல்வர்கள் இப்பகுதியில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். வீரத்துக்கும், சுய மரியாதைக்கும் அடையாளமாக அரசியலிலும், திரைப்படங்களிலும் குறிப்பிடப்படும். ஆனால் மதுரை திரைப்பட விநியோகம் ஆதிக்க சக்திகளிடமும், திரையரங்குகள் அடிபணிந்து போகக்கூடியவர்களிடமும் சிக்கிக்கொண்டு சினிமா தொழிலை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. தமிழக விநியோகம், திரையிடல் ஒட்டு மொத்தமாக மாறிவிட்ட நிலையில் சுதந்திரக்காற்றை சுவாசிக்காது அதற்கான எந்த முயற்சியும் எடுக்காது தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது இப்பகுதியில் உள்ள திரையரங்குகள்.

சேலத்துக்கும், மதுரைக்கும் ஒரு படத்தின் விநியோக உரிமையை ஒருவரே வாங்கியிருப்பார். ஆனால் சேலத்தில் அட்வான்ஸ் அடிப்படையில் தியேட்டர்களில் படம் திரையிட ஒப்பந்தம் செய்வார். மதுரையில் மினிமம் கேரன்டியில் தான் படம்திரையிட முடியும் எனத் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்வார். இதற்குக் காரணம் மதுரை ஏரியாவில் தியேட்டர் உரிமையாளர்களிடம் நிலவும் ஒற்றுமையின்மையும், போட்டி மனப்பான்மையும் தான் என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.

அது மட்டுமின்றி மதுரை ஏரியாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சிலரது கட்டுப்பாட்டில் புதிய படங்களின் விநியோக உரிமைகள் கையகப்படுத்தப்படுவதால் வருடந்தோறும் திரையரங்குகளுக்கு படங்களைத் திரையிட அவர்களை நம்பியிருக்க வேண்டியிருப்பதும் காரணம் என்கிறார்கள்.

சீமராஜா வியாபாரத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழக்கூடும். தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் விநியோக உரிமை சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் படம் என்ன வசூல் செய்ததோ அதைக் காட்டிலும் கூடுதலாக ஏரியா உரிமை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது

சினிமா டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் குறைந்து வருகின்றது என்று திரைப்படத் துறையினர் கூறி வருகின்றனர். அதே வேளை முந்தைய படம் வசூல் செய்ததைக் காட்டிலும் அதிக விலைக்கு படத்தின் ஏரியா உரிமை விற்கப்படுவது படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தான் எனக் கூறுகின்றனர்.

அதிக செலவில் தயாரிக்கப்படும் படம் என்பதால் டிக்கெட் விலையை இரு மடங்கு கட்டணத்தில் விற்க முடியாது. சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. இருப்பினும் இந்த போக்கு தொடர்வதற்குக் காரணம் விநியோகஸ்தர்கள் தான் என்கின்றனர் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்.

அதிக விலை கொடுத்து வாங்கியதால் அதிகபட்சமான அட்வான்ஸ் தொகை தியேட்டர்களில் கேட்கப்படுகிறது. இதில் தான் மதுரை தியேட்டர்கள் வேறுபடுகின்றன. ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வந்து விடுவதால் அவர்கள் கேட்கும் எம்.ஜி தொகையைக் கொடுத்து படத்தைத் திரையிட வேண்டியுள்ளது.

மதுரை ஏரியாவில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களில் அதிகபட்ச வசூல் 4 கோடி ரூபாய். சீமராஜா படத்தின் மதுரை ஏரியாவிலை 4.50 கோடி. சுமார் 4.75 கோடி ரூபாய் வரை தியேட்டர்களில் எம்.ஜி, அட்வான்ஸ் வசூலிக்கப்பட்டுள்ளது. போட்டிக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் சீமாராஜா படத்தைத் திரையிட போட்டி ஏற்பட்டதால் வாங்கிய விலையைக் காட்டிலும் 25 லட்ச ரூபாய் கூடுதலாக விநியோகஸ்தருக்கு கிடைத்துள்ளது.

படத்திற்குக் கொடுத்துள்ள எம்.ஜி. தொகையை முதல் வாரத்தில் வசூலிக்கும் முனைப்பில் டிக்கெட் விலை அதிகரிக்கப்படலாம். இதனால் முதல் வாரத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வரமாட்டார்கள். படம் சூப்பர் என்று செய்தி கசிந்து டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டால் இரண்டாவது வாரம் குடும்பங்கள் தியேட்டருக்கு வரும்.

தற்போதைய நிலவரப்படி மதுரை ஏரியா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணத்தில் 6.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டால் முதலீடு திரும்பக் கிடைக்கும். கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனையால் லாபம் கிடைக்கும். சீமராஜா ஜெயித்தால் இது சாத்தியமாகலாம்.

மகிழ்ச்சியில் நெல்லை ஏரியா.. திரையரங்குகள் நெருக்கடியில் விநியோகஸ்தர்..

நாளை மாலை 7 மணி பதிப்பில்..

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 7 செப் 2018