மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன்!

ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன்!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு தொடங்கவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தைச் செயல்படுத்தும் முயற்சியில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இறங்கியுள்ளார். அதன்படி, ராஜஸ்தான் மாநில அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விரைவில் செல்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

செல்போன் செயலிகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் அறிந்துகொள்ள உதவும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ‘பாமாஷா யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அம்மாநிலத்தில் உள்ள 5,000 கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பெற செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச செல்போன்கள் வழங்கும் திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலத்திலுள்ள மக்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக பாமாஷா வாலெட் செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தினார் வசுந்தரா ராஜே.

கடந்த ஆண்டு ஸ்ரீகங்காநகர், பாகர், தாஸா, பில்வாரா, கரௌலி மற்றும் தோல்பூர் ஆகிய நகரங்களில் அபய் எனப்படும் ஓர் உயர் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு மையங்களைத் தொடங்கி வைத்தார். போக்குவரத்து மேலாண்மை, 100ஐ டயல் செய்து அவசர போலீஸை அழைப்பது, இணையதளக் குற்றங்கள், வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon