மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

நேரடிப் பலன் திட்டத்தில் உரம் விற்பனை!

நேரடிப் பலன் திட்டத்தில் உரம் விற்பனை!

நேரடிப் பலன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 15.55 மில்லியன் டன் அளவிலான உரம் ஸ்வைப்பிங் மெஷின்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உரங்களுக்கான அரசின் நேரடிப் பலன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், ஆதார், விவசாய அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது. இந்த உரம் ஸ்வைப்பிங் மெஷின்கள் வாயிலாகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஜூலை மாதம் வரையில் 15.55 மில்லியன் டன் அளவிலான உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் உரத் துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் 1.29 மில்லியன் டன்னும், மே மாதத்தில் 2.26 மில்லியன் டன்னும், ஜூன் மாதத்தில் 4.63 மில்லியன் டன்னும், ஜூலை மாதத்தில் 7.35 மில்லியன் டன்னும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் - ஜூலை மாதங்களில், உரம் வகைகளிலேயே அதிகபட்சமாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட யூரியா 7 மில்லியன் டன் அளவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட யூரியா 1.34 மில்லியன் டன்னுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டை அமோனியம் பாஸ்பேட், பாஸ்பேட்டிக், பொட்டாசிக், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், மரியேட் ஆஃப் பொட்டாஷ் மற்றும் காம்போஸ்ட் உள்ளிட்ட உரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு விற்பனையாகியுள்ளன. ஸ்வைப்பிங் மெஷின்கள் வாயிலாக உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதோடு, விற்பனை நிலவரத்தைச் சரியாகக் கணக்கிட முடிவதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

செவ்வாய், 28 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon