மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகும் ரஞ்சன் கோகாய்

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகும் ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துவரும் தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதையடுத்து, வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பார் என்று செய்தி வெளியிட்டுள்ளது இந்தியாலீகல்லைவ் இணையதளம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துவரும் தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளார். வழக்கமாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பே, அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக, நேற்று (ஆகஸ்ட் 28) மத்திய சட்ட அமைச்சகம் தீபக் மிஸ்ராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதில், அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் தற்போது இருந்து வருபவர் நீதிபதி ரஞ்சன் கோகாய். கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று, டெல்லியில் உச்ச நீதிமன்றச் செயல்பாடுகளைக் கண்டித்து நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நீதிபதி செலமேஸ்வர், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரோடு ரஞ்சன் கோகாயும் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றிருந்தார். அப்போது, நான்கு நீதிபதிகளும் தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தற்போது, பணி மூப்பின் அடிப்படையில் ரஞ்சன் கோகாய் பெயரையே தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதி பதவிக்கு முன்மொழிவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் தேதியன்று, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தீபக் மிஸ்ரா கடிதம் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி ரஞ்சன் கோகாய் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்தார். 1978ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று, கோகாய் கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதியன்று, இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியன்று, இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி உயர்வு பெற்றார்.

விரைவில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ரஞ்சன் கோகாய், வரும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 29 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon