மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

கேரள மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்!

கேரள மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்!

அரசு தரப்பிலிருந்து இலவசமாக 89,540 டன் அளவிலான உணவு தானியங்களும், 100 டன் அளவிலான பருப்பு வகைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்துக்கு மத்திய அரசின் தரப்பிலிருந்து வழக்கமாக ஒவ்வொரு மாதத்துக்கும் 1.18 லட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 52 சதவிகிதத்தினருக்கு அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது விநியோக அமைப்பு வாயிலாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உதவிகள் கிடைக்கப் பெறாத கேரள மக்களுக்கு வெள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு, 89,540 டன் உணவு தானியங்களும், 100 டன் அளவிலான பருப்பு வகைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆகஸ்ட் 21ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறாத கேரள மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களையும், பருப்பு வகைகளையும் வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அம்மாநில மக்கள் வெகுவாகப் பயன்பெறுவார்கள். அவர்களுக்குத் தினசரி அடிப்படையில் 80 டன் அளவிலான பருப்புகளை வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முறையான விநியோகம் உறுதிசெய்யப்படுவதோடு பொருட்களின் விலையையும் பரிசோதிக்க இயலும். இது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மே மாதம் 30ஆம் தேதி முதல் 373 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon