மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 5: மினிமலிசம்: வேரைத் தேடி!

மீச்சிறு காட்சி 5: மினிமலிசம்: வேரைத் தேடி!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

மினிமலிச ஓவியப் பாணி மேற்கில் இருபதாம் நுற்றாண்டின் பாதியில் உருவானது என்று பார்த்தாலும் அதன் வேர்களைத் தேடக் கொஞ்சம் பின்னோக்கியும் போக வேண்டியுள்ளது. எந்த ஒரு கலை வடிவமும் அந்தரத்தில் பிறப்பதில்லை. ஏதோ ஒரு மரபின் தொடர்ச்சியை உள்வாங்கியோ, மறுத்தோதான் அது எழுகிறது. மினிமலிசமும் அப்படித்தான்.

அந்த வகையில் மினிமலிச ஓவியப் பாணிக்கான ஆரம்பங்கள் தெரிவதாகக் கலை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவது ரஷ்ய ஓவிய கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) தன் பிற்காலத்தில் வரைந்த ஓவியங்களைத்தான். சூப்பர்மேடிச (Suprematism) பாணி ஓவியங்கள் என்று கஸிமிரின் ஓவியங்களை வரையறுத்தாலும், அவருடைய ஜியோமிதி வடிவங்களைக் கொண்ட அரூப ஓவியங்கள் கிட்டத்தட்ட மினிமலிசப் பாணிக்கான கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உதாரணம் கஸிமிர் 1924இலேயே வரைந்த இந்த Black Circle எண்ணெய்ச் சாய ஓவியம். “வழக்கமான ஓவியங்களில் வரும் மனிதர்கள், பொருட்கள் சார்ந்த ஓவிய உலகிலிருந்து விலகி, எல்லாவற்றிற்கும் அடிப்படையான எளிய வடிவங்களை வரைய வேண்டும் என்கிற ஆசையே இது” என்றார் கஸிமிர்.

மேற்கத்திய பாணி கிளாஸிக் ஓவியங்களில் வரும் துல்லியமான அலங்காரங்கள் மீதான மன விலகல் என்று கஸிமிர் சொல்வதைப் புரிந்துகொள்ளலாம். ஆழமாகப் பார்த்தால் மிகவும் ஆத்மிகமான பார்வை கொண்டது கஸிமிரின் இந்தக் கூற்று.

புதிய ஓவிய உலகத்தின் அழகியலுக்கான “புதிய அடையாளம்” (new icons) என்று கஸிமிர் தனது இவ்வகை ஓவியங்களைப் பற்றிச் சொன்னார். இந்த ஓவியம் கலை ஆர்வலர்களிடையேயும் அறிவுஜீவுகளிடையேயும் பேசுபொருளானபோதும் இவ்வகையான புதிய சோதனை முயற்சிகளைப் பொதுமக்கள் வரவேற்றதாகத் தெரியவில்லை.

ஸ்டாலின் போன்றவர்கள் இந்த வகையான நவீன ஓவியப் பாணி மீது புரிதலின்மையைக் கொண்டிருந்ததாகவும் அறிகிறோம். நவீன ஓவியர்கள் சிஐஏவின் கையாட்கள் என்று வேறு அப்போதைய இடதுசாரிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் “மக்கள் கலை”யாக அவர்கள் அங்கீகரிக்கவில்லை. ஸ்டாலின், கஸிமிர் போன்ற கலைஞர்களைத் துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

ஆனால், ஓவியப் பாணிக்கு கஸிமிர் அளித்தது ஒரு வகையான விடுதலை என்றெல்லாம் இப்போது கலை விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். கஸிமிரின் ஓவியப் பாணி மினிமலிச ஓவியப் பாணிக்கு முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.

கட்டுரையாளர்:

சந்தோஷ் நாராயணன்

ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர்.

இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

மீச்சிறு காட்சி 4: கனசதுர மரணம்!

செவ்வாய், 14 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon