மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 4: கனசதுர மரணம்!

மீச்சிறு காட்சி 4: கனசதுர மரணம்!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

கடந்த அத்தியாயத்தில் சொன்னதுபோல மினிமலிசத்தில் சொல்லாமல் சொல்வதற்குச் சரியான உதாரணமாக அமெரிக்கக் கலைஞரான டோனி ஸ்மித் (Tony Smith) உருவாக்கிய ஒரு சிற்பத்தைச் சொல்லலாம். மினிமலிசக் கலையின் முன்னோடிகளில் ஒருவர் இவர்.

நவீன தொழில்மயமாக்கம் உருவாக்கிய தாக்கம் மினிமலிஸ்ட் கலைஞர்களின் படைப்புக்கான பொருட்களை (Medium or art materials) தீர்மானித்ததில் ஒரு பங்கு வகித்தது. அதுவரை மரபான கலைஞர்கள் தேர்ந்துகொண்ட வண்ணச் சாயங்களையோ, மரம், கல் போன்ற பொருட்களையோ மட்டுமல்லாமல் நவீன தொழில்மயமாக்கப் பொருட்களான உருக்கு, பிளாஸ்டிக், பாலிதீன் போன்ற பொருட்களைக்கூடத் தங்கள் ஊடகமாகத் தேர்ந்தெடுத்தனர். அதன் நல்லது கெட்டதுகளைப் பார்வையாளரின் முடிவுக்கு விட்டனர்.

கிட்டத்தட்ட மேற்கித்திய மினிமலிசச் சிற்பக் கலையின் முதல் படைப்பு என்று சொல்லத்தக்கது டோனி ஸ்மித் 1962இல் உருவாக்கிய “சாவு” (Die) என்னும் சிற்பம். ஸ்டீலினால் செய்யப்பட்ட கனசதுர வடிவம். மரணத்திற்கும் இந்த கனசதுரச் சிற்பத்திற்கும் என்ன தொடர்பு?

டோனி ஸ்மித்தின் குடும்பம் நியூ ஜெர்ஸியில் தொழிற்சாலை நடத்திக்கொண்டிருந்தது. சிறு வயது முதல் ஸ்மித் தொழிற்சாலைகளுக்குப் போகும்போது ஸ்டீல் போன்ற உற்பத்திப் பொருட்கள் அவரைக் கவர்ந்திருக்கின்றன. சிறு வயதில் அவருக்கிருந்த காசநோய் மரணம் பற்றிய சிந்தனையில் ஆழ்த்தியிருக்கிறது. கூடவே காசநோய் காரணமாகப் பள்ளியிலும் சமூகத்திலும் அவர் அனுபவித்த விலக்கமும் தனிமையும். இவை எல்லாம் சேர்ந்ததுதான் இந்தச் சிற்பம்.

இந்த கனசதுரச் சிற்பத்தின் வண்ணம் துருவேறிய பழுப்பு நிறம். ஸ்மித் சிறு வயதில் அருந்திய மருந்துகள் பழுப்பு நிற அட்டைப்பெட்டிகளில் வந்தவை என்பதை நினைவுகூரும்போது இந்தச் சிற்பத்துக்குப் புதிய பரிமாணம் கிடைக்கிறது.

ஆனால், இந்தச் சிற்பம் எப்படி மரணத்தைச் சொல்கிறது என்று அறிய வேண்டுமானால் அதன் அளவு பற்றி நாம் அறிய வேண்டும். ஆம்; இந்தச் சிற்பம் நீளம், அகலம், ஆழம் என்று எல்லாவற்றிலும் ஆறு அடிகள் கொண்டதாகச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆறு அடி என்பது மரணத்தின் அளவுதான் அல்லவா.

தனிமையும் மரணமும் மிகவும் அரூபமானவை. அவற்றை மினிமலிசப் பாணி சிற்பத்தில் கொண்டுவந்த டோனி ஸ்மித்தின் இந்த ‘Die’ ஒரு மாஸ்டர் பீஸ். இப்போது இந்தச் சிற்பத்தின் முன் நிற்கும் பார்வையாளர் தன்னுடைய வாழ்வியல் முதிர்ச்சியைக் கொண்டு காட்சி அனுபவத்தின் எல்லைகளை விரித்துக்கொள்ள முடியும். இந்த நான்கு பக்கங்கள் கொண்ட கனசதுர மினிமலிசச் சிற்பம், பார்வையாளருக்கு எல்லையற்ற பக்கங்கள் கொண்ட பேரனுபவமாகலாம்.

இன்னும் கொஞ்சம் இறங்கிவந்து சொல்ல வேண்டுமானால் காதலன் படத்தில் காதலியின் ஊக்கு ஒன்றை பிரபுதேவாவும் அவர் அப்பா எஸ்பிபியும் தேடும் காட்சி ஞாபகம் இருக்கிறதா? எஸ்பிபியைப் பொறுத்தவரைக்கும் அது ‘சின்ன ஊக்கு’. ஆனால், பிரபுதேவாவுக்கு அதுவே தன் காதலின் மினிமலிச வடிவம். காதலியின் மொத்த ஞாபகம்.

சின்னஞ்சிறிய விஷயங்கள் எல்லாம் எப்போதும் சின்னஞ்சிறிய விஷயங்கள் மட்டுமே அல்ல. இதுவே மினிமலிசத்தின் கலை அழகியல்.

(காண்போம்)

(கட்டுரையாளர்:

சந்தோஷ் நாராயணன்

ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 7 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon