மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 3: சொல்லாமல் சொல்!

மீச்சிறு காட்சி 3: சொல்லாமல் சொல்!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

இரண்டாம் உலக யுத்தம் கலைஞர்களையும் கலையையும் பாதித்தது என்பதை நாம் அறிவோம். அவநம்பிக்கைகளின் காலம். மனச் சிதறல்களின் நேரம். கூரிய உணர்வெழுச்சி முனையில் எப்போதும் நிற்கும் கலைஞர்களை அது ஆழமாகப் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் தடங்களை உலக இலக்கியங்களிலும், உலக சினிமாக்களிலும் பார்த்திருப்போம். அந்தக் காலகட்டம் ஓவியக் கலையைப் பாதித்ததின் அடையாளம்தான் Abstract Expressionism. ‘அரூப வெளிப்படுத்தல்’ என்று கொஞ்சம் தமிழ்ப்படுத்திப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ‘அரூப வெளிப்படுத்தல்’ பாணியில் முன் நின்ற கலைஞர்களில் முக்கியமானவராக ஜாக்சன் பொல்லாக்கை (Jackson Pollock) சொல்லலாம். அவருடைய ஓவியங்கள் பரிச்சயம் கொண்டவர்களுக்கு அதன் பின்னணி புரியும். புதியவர்களைப் பொறுத்தவரை கேன்வாஸில் இப்படி கலரைக் கொட்டி வைத்திருக்கிறாரே என்று நினைக்கலாம். உங்கள் நினைப்பும் சரிதான். அதிகாரங்களுக்காக முட்டி மோதிக்கொண்டிருந்த, இயந்திரமயமாகிக் கொண்டிருந்த நவீன மேற்கத்திய உலகின் அழுத்தங்களுக்கான ஓர் எதிர்வினைதான் பொல்லாக்கின் இந்த drip ஓவியங்கள்.

அதிகாரம் அதீத ஒழுங்கை வலியுறுத்தும்போது கலைஞன் கட்டற்ற சுதந்திரத்தைக் கலையில் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் புரிதல்களுடன் நவீன கலைகளை அணுகினால் அவை நமக்குக் காட்டும் உலகம் வேறாக இருக்கிறது.

இந்த அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசத்தின் நேர்மறை எதிர்மறை பாதிப்பு கலையில் மினிமலிச இயக்கத்தைப் பாதித்தது என்பதற்காகத்தான் இந்த முன்னுரை. இலக்கியத்தில் ‘ஆசிரியனின் மரணம்’ என்றொரு கொள்கை உண்டு. ஃபிரெஞ்ச் இலக்கிய விமர்சகர் ரோலந்த் பார்த்தஸ் (Roland Barthes) முன்வைத்த கோணம் அது. படைப்புதான் முக்கியம் ஆசிரியன் அல்ல என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். அதை ஏற்கும் மறுக்கும் தரப்புகளும் உண்டு. மினிமலிசக் கலைஞர்களை கிட்டத்தட்ட இந்த வகை மாதிரியில் சேர்க்கலாம்.

மினிமலிசக் கலை என்பதை அதைப் படைத்த கலைஞர்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை என்பது அவர்கள் வாதம். படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்பதெல்லாம் அடிக்கடி இலக்கிய உலகில் காதில் விழும் வாசகம். ஒரு படைப்பிற்கும் பார்வையாளனுக்குமிடையில் படைப்பாளி தன் உணர்ச்சிப்பெருக்கால் மறைத்துக்கொண்டு நிற்கத் தேவை இல்லை என்றார்கள். இந்த எண்ணம் படைப்பை மிகவும் எளிதானதாக, நேரடியானதாக, மினிமலாக, உருவாக்கத் தூண்டியது. உதாரணத்துக்குச் சிறிய இரும்புக் குண்டை மட்டுமே பார்வையாளனின் முன் வைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் படைப்பாளியாக மினிமலிசக் கலைஞர்கள் இருந்தனர். அந்த உலோக உருண்டை பார்வையாளனுக்குள் என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் முக்கியம். பீரங்கியிலிருந்து தவறிய ஒரு குண்டாக அதை உருவகிக்கும் பார்வையாளன் அதிலிருந்தும் அடையும் கலை அனுபவம் முற்றிலும் வேறாக இருக்கலாம். படைப்பாளி யுத்தத்தை அக்குவேறு ஆணிவேறாக வரையத் தேவை இல்லை அல்லவா.

சமீபத்திய சென்னை ரயில் விபத்தில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த ஒரு டிஃபன் பாக்ஸைப் புகைப்படத்தில் பார்த்தேன். விபத்தின் மொத்தக் கதையையும் மினிமலாகச் சொல்ல அந்த ஒரு புகைப்படம் போதுமானதாக இருந்தது. காட்சி தொடர்பில் மினிமலிசத்தின் வலிமை அது.(காண்போம்)

கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திங்கள், 30 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon