மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

மீச்சிறு காட்சி 2: திகைக்கவைத்த மினிமலிசம்?

மீச்சிறு காட்சி 2: திகைக்கவைத்த மினிமலிசம்?

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

மினிமலிசம் என்கிற சொல் அறிமுகமான கலைத் துறையிலிருந்து இந்தத் தொடரை ஆரம்பிப்பதுதான் பொருத்தமானது.

1966இல் நியூயார்க்கின் யூதர் மியூசியத்தில் ஒரு கலைக் கண்காட்சி நடந்தது. Sol LeWitt, Dan Flavin, Robert Morris, Carl Andre, Donald Juddபோன்ற நாற்பது கலைஞர்களின் சிற்ப, ஓவியக் கண்காட்சி அது. மினிமலிசம் என்கிற வார்த்தையைக் கலை உலகில் பிரகடனம் செய்தது இந்தக் கண்காட்சிதான்.

புகைப்படக் கலை வந்த பிறகு யதார்த்த பாணி ஓவியங்கள் மதிப்பிழந்து நவீன பாணி ஓவிய முறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிப்படத் தொடங்கின. அது இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இம்ப்ரெஷனிஷம், எக்ஸ்பிரஷனிசம், க்யூபிசம், சர்ரியலிசம் போன்ற வெவ்வேறு பாணியிலான நவீன ஓவிய, சிற்பக் கலையை வெவ்வேறு கலைஞர்களும் கலை இயக்கங்களும் வளர்த்தெடுத்தன. பிரபலப்படுத்தின.

ஆனால், இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் விலகிய பாணியில் 1950களில் எழ ஆரம்பித்தது மினிமலிச பாணியிலான கலை வடிவங்கள். ராபர்ட்மோரீஸ் (Robert Morris) போன்ற சிற்பிகளின் மினிமலிச பாணியிலான சிற்பங்கள் வடிவியலின் அடிப்படை வடிவங்களைக் கொண்ட எளிய வெளிப்பாடுகளாய் இருந்தன. மினிமலிசத்தின் தாக்கம் ஓவியத்தை விடச் சிற்பத்தில்தான் முதலில் ஏற்பட்டது என்று சொல்லலாம். காரணம், ஓவியத்தைவிடச் சிற்பங்களில் எப்போதும் சிக்கலான வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், ராபர்ட் மோரீஸ் போன்றவர்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு இதுபோன்ற எளிய வடிவங்களைக் காட்சிக்கு வைத்தார்கள். கலை விமர்சகர்கள் இது போன்ற படைப்புகளின் முன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் மூளையைப் பிசைந்து நின்றார்கள்.

கலை வரலாற்றாசிரியர் லியோ ஸ்டெய்ன்பெர்க்குடன் (Leo Steinberg) சேர்ந்து ராபர்ட் மோரீஸ் எழுதிய ‘Notes on Sculpture’ என்னும் கட்டுரைகள் சிற்பக் கலையில் மினிமலிச பாணியைப் பற்றிய விவாதத்தை உருவாக்கின. மிக எளிய வடிவங்களை மட்டுமே சிற்பக் கலையில் முன்னிறுத்தி அது பேசியது. எளிய வடிவங்கள் ஆழமான விளைவுகளைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்த முடியும் என்று மோரீஸ் வாதாடினார். குறிப்பாக மினிமலிசக் கலைப் படைப்புகளைப் பார்ப்பவர்களின் ரசனையையும் அறிதலையும் அது கோருகிறது. கலையில் பார்வையாளனின் பங்களிப்புக்கும் அது அதிக இடத்தைக் கொடுக்கிறது.

அதன் தொடர்ச்சியாக ஃபிராங்க் ஸ்டெல்லா (Frank Stella), எல்ஸ்வொர்த் கெல்லி (Ellsworth Kelly), ஆக்னஸ்மார்ட்டின் (Agnes Martin), ராபர்ட் ரைமன் (Robert Ryman) போன்ற ஓவியர்களும் ஓவியத்தில் மினிமலிசத்தைக் கொண்டாடினார்கள். குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்கள், குறைவான வடிவங்கள், உருவங்கள் எல்லாவற்றிலும் “Less is more’ என்கிற கருத்தைப் பிரதிபலித்தனர்.

கலைத் துறையில் ஒரு சொல்லாக, பாணியாக மினிமலிசம் 60களில்தான் பேசப்பட்டது என்றாலும், அவ்வகையான மினிமலிச பாணிக் கலை வெளிப்பாடுகள், வரலாற்றில் இணையாகவே பயின்று வரப்பட்டிருக்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். பிரபஞ்சவியலைக் குறியீடாகச் சுட்டுகிறது என்று போற்றப்படும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நடராஜர் சிலையை வடிவமைத்த நமது அதே மரபில்தான் சிவனை மிகவும் மினிமலிசப் பாணியில் சிவலிங்கமாகவும் வடித்தெடுத்திருக்கிறார்கள்.

லிங்கத்தின் வடிவம் பற்றி கலை, வரலாற்று, மானுட ஆய்வாளர்கள் சொல்லும் காரணிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தன் வடிவில் அது மினிமலிசப் பாணியைத்தான் கொண்டுள்ளது என்று சொல்வேன்.

(காண்போம்… அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை)

கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

செவ்வாய், 24 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon