மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஜூலை 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அய்ய நாடார் (அய்யன் ஃபயர் வொர்க்ஸ்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அய்ய நாடார் (அய்யன் ஃபயர் வொர்க்ஸ்)

சிவகாசிக்கென தனித்த தொழில் வரலாற்றை உருவாக்கிச் சென்ற அய்ய நாடார் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 1905ஆம் ஆண்டில் பழனியப்ப நாடார் மற்றும் நாகம்மாளுக்குப் பிறந்தவர் அய்ய நாடார். இன்று குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் அளவுக்கு சிவகாசி பெரும் தொழில் வளர்ச்சி கண்டிருக்கிறது. வருடத்திற்கு ரூ.1,000 கோடியில் தொழில் வர்த்தகம் நடக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், 60 வருடங்களுக்கு முன்பு சிவகாசியில் எந்தவிதமான தொழில் வளங்களும் இல்லை. இதனால் வாழ்வாதாரம் தேடி 1922ஆம் ஆண்டில் அய்ய நாடாரும், அவருடைய உறவினருமான சண்முகம் என்பவரும் கொல்கத்தாவுக்கு வேலைக்குச் சென்றனர். இருவரும் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் தங்கி எட்டு மாதங்கள் வேலை பார்த்தனர்.

இதன் பிறகு தொழிலைக் கற்றுக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். சிவகாசிக்கு வந்த பிறகு இருவரும் தீப்பெட்டித் தொழிலைச் சிறிய அளவில் தொடங்கி நடத்தினர். இதற்கான இயந்திரங்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தனர். அணில் மற்றும் அய்யன் ஆகிய பிராண்டுகளில் தொழிலை நடத்தினார் அய்ய நாடார். சிறிது காலத்திலேயே தொழிலை சிறப்பாகக் கற்று வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்தார்.

ஆனால், 1940ஆம் ஆண்டுகளில் மூண்ட உலகப் போர் இவரது தொழிலையும் பாதித்தது. இதற்குப் பிறகு தீப்பெட்டி உள்ளிட்ட நெருப்புப் பொருட்களை தயாரிக்க உரிமம் பெற வேண்டியதை இந்தியா கட்டாயமாக்கியது. பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதேநேரத்தில் இப்பகுதியில் வாழும் பலரும் இத்தொழிலைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

1960ஆம் ஆண்டுகளில் சிவகாசியில் தீப்பெட்டித் தயாரிப்பும், பட்டாசு உற்பத்தியும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அய்ய நாடார் மற்றும் சண்முகம் ஆகியோருடைய தொழிலாக மட்டுமே இருந்த தீப்பெட்டி உற்பத்தி அப்பகுதி மக்களின் தொழிலாக மாற ஆரம்பித்தது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக தீப்பெட்டி உற்பத்தி மாறியது.

தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் எனத் தொழில் எல்லைகள் நாளுக்கு நாள் வேகமாக விரிவடைந்தன. 1980ஆம் ஆண்டில் 189 பேர் ஆலைகளைத் தொடங்கியிருந்தனர். 2001ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 450 ஆலைகளாக அதிகரித்துவிட்டது. இப்போது சுமார் 700 தொழிற்சாலைகள் வரை சிவகாசியில் பட்டாசு உற்பத்தியிலும், தீப்பெட்டி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றன. பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி அச்சகத் துறையிலும் தமிழ்நாட்டின் முதன்மை நகராக சிவகாசி உருவாகியுள்ளது. இவற்றுக்கெல்லாம் விதையாய் இருந்தவர் அய்ய நாடார். அச்சகத் துறையிலும் இவரே இப்பகுதியில் முதலில் கால் பதித்தார்.

ஒருபக்கம் தொழில் துறையில் முன்னேற்றம் கண்டிருந்த வேளையில், கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் அய்ய நாடார் திட்டமிட்டார். இதன்படி 1963ஆம் ஆண்டில் அய்ய நாடார் ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கினார். இதற்கிடையில் 1955ஆம் ஆண்டுமுதல் 1963ஆம் ஆண்டு வரையில் சிவகாசி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். அதிலும் தனது பணியை அய்ய நாடார் சிறப்பாகச் செய்தார் என்றே கூற வேண்டும். இவர் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில்தான் வெம்பக்கோட்டை அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்துதான் இன்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இறுதியாக 1982ஆம் ஆண்டில் அய்ய நாடார் தனது 78ஆவது வயதில் மரணத்தைத் தழுவினார். இவரது மறைவுக்குப் பிறகு இவரது மகன்கள் கிரஹ துரை மற்றும் வைரப் பிரகாசம் ஆகிய இருவரும் தொழில்களைக் கவனித்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டில் அய்ய நாடார் ஜானகியம்மாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 80 விழுக்காடும், பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. அச்சுத் துறையிலும் 60 விழுக்காடு பங்களிப்பை சிவகாசி கொண்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் விதையாய் இருந்தவர் அய்ய நாடார் என்பதை மறுக்க முடியாது. வாழ்க்கையைத் தனக்கானதாக மட்டுமே எண்ணி வாழ்ந்திருந்தால் இன்னும்கூட இவர் பொருளாரதார வளர்ச்சியைக் கண்டிருக்கலாம். ஆனால், தான் கற்றறிந்த தொழிலைத் தான் வாழ்ந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திய, அறிமுகப்படுத்திய அய்ய நாடார் தமிழகத்தின் மறக்கமுடியாத தொழிலதிபராகவே என்றும் இருப்பார்.

தொகுப்பு: பிரகாசு

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: கார்ல் பென்ஸ் - மெர்சிடஸ் பென்ஸ்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

ஞாயிறு 22 ஜூலை 2018