மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஜூலை 2018

டிஜிட்டல் திண்ணை: தினகரன் கட்சியில் கலகக் குரல்!

டிஜிட்டல் திண்ணை: தினகரன் கட்சியில் கலகக் குரல்!

மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஃபேஸ்புக் லொக்கேஷன் கற்பகம் கார்டனைக் காட்டியது.

“டிடிவி தினகரன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறேன். நேற்று தினகரனைப் பார்க்க ஏராளமான கட்சிக்காரர்கள் வந்தாலுமே அவர் யாரையும் சந்திக்கவில்லை. அஷ்டமி என்பதால் எல்லாச் சந்திப்புகளையும் தவிர்த்துவிட்டார். இன்று வந்த நிர்வாகிகள் பலரது கைகளில் புகார் மனுக்கள் இருந்தன. எல்லாம் கடந்த சில நாட்களாகத் தினகரன் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகத்தான். தினகரன் வீட்டு வாசலில் இருந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியதை அப்படியே சொல்கிறேன். ‘கட்சிக்கு நிர்வாகிகளை நியமிச்சதுல எங்களுக்கு சந்தோஷம்தான். அதுக்குத் தகுதியான ஆளுங்களைப் போடணும் இல்லையா? அம்மா உயிரோடு இருந்தவரைக்கும் யாரை எந்தப் பொறுப்புக்கு போடுவாங்கன்னு ‘நமது எம்.ஜி.ஆர்’இல் அறிவிப்பு வரும் வரைக்கும் தெரியாது. ஊரு பேரு தெரியாதவனுக்குக்கூட திடீர்னு பெரிய பொறுப்பு கொடுத்திருப்பாங்க.

என்னன்னு விசாரிச்சா, அது எங்காவது சின்னம்மாவோட சொந்தக்காரங்களுக்குத் தூரத்துச் சொந்தமாகவோ அல்லது அவங்க சொன்ன ஆளுங்களாகவோ இருக்கும். கோவை மண்டலம்னா ராவணன்; திருச்சி மண்டலம்னா இஞ்சினியர் கலியபெருமாள் என்று சின்னம்மா சொந்தக்காரங்க சொல்ற ஆளுங்களுக்குத்தான் பொறுப்பு வரும். அதைத் தாண்டி இன்னொரு அதிகார மையமும் இருக்கும். அது அம்மாவோட உதவியாளர் பூங்குன்றன். அவரு சொல்ற ஆட்களுக்கும் பொறுப்பு கிடைக்கும்.

அம்மாவோட மறைவுக்குப் பிறகு தினகரன் கையில் பொறுப்பு வந்துச்சு. தனியாகக் கட்சியும் தொடங்கினாரு. ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல தினகரனைப் பார்க்க முடிஞ்சது. போயஸ் கார்டன் கேட் பக்கத்துலகூட அதிமுக தொண்டனால் அம்மா இருந்தவரைக்கும் போக முடியாது. ஆனால், தினகரன் வீட்டுக்குள்ளேயே போய் டீ குடிக்கும் சுதந்திரம் ஆரம்பத்தில் இருந்தது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன்.

கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், தினகரன் வீட்டு கிச்சன் கேபினெட். தினகரன் மனைவி அனுராதா ஆரம்பத்தில் ஜெயா டிவியை நிர்வகித்துவந்த காலத்தில், சாதாரண ஊழியராக அங்கே பணியாற்றியவர் ஜனார்த்தனன். அதன் பிறகு, தினகரன் வீட்டுக்குக் காய்கறி வாங்கி வருவதுவரை எல்லா வேலைகளையும் பார்த்தார். ஒருகட்டத்தில் ஜெயா டிவியிலிருந்து ஒதுங்கி மொத்தமாக தினகரன் வீட்டோடு செட்டிலாகிவிட்டார். தினகரனின் மொத்த ரகசியங்களும் தெரிந்த ஒரே நபர் இன்று ஜனார்த்தனன்தான். அதனால் தினகரன் அவரைக் கேள்வியும் கேட்பதில்லை. கேட்டாலும் தினகரன் மனைவி அனுராதா அனுமதிப்பதும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரானது. பட்டியலைத் தயாரித்தவர் ஜனார்த்தனன். யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தீர்மானிக்கும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்தும் பேசியிருக்கிறார் ஜனார்த்தனன். ‘இதை அவருக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேணுமா?’ எனச் சில டீலும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பேசிப் பேசித்தான் ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலைத் தலைமை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கு. சம்பந்தமே இல்லாதவங்களை சம்பந்தமே இல்லாத பொறுப்புக்கு போட்டிருக்காங்க. செய்தித் தொடர்பாளர்களாகச் சிலரை நியமிச்சிருக்காங்க. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தினகரனுக்காகப் பேசி வந்த அக்னீஸ்வரன், தேனி கர்ணன், குரு முருகானந்தம் எனப் பலர் புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. இன்னும் சில நிர்வாகிகள் பட்டியல் வெளியானதுமே ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருக்கிறார்கள்.

‘இங்கே நான் என்ன சொல்றேனோ அதுதான் நடக்கும். என்னை எதிர்க்கணும்னு நினைச்சா யாரும் கட்சியில் இருக்கவே மாட்டீங்க..’ என மிரட்டியிருக்கிறார் ஜனார்த்தனன். இப்படிப் பல நிர்வாகிகளும் புகார்களுடன் இன்று வந்தாங்க. ஆனால், என்ன பிரயோஜனம்? எல்லா மனுக்களையும் அந்த ஜனார்த்தனன்தான் வாங்குறாரு. அம்மா இருந்தபோது, பூங்குன்றன் புகார்களை வாங்கிவிட்டு அம்மா கவனத்துக்கே கொண்டுபோக மாட்டாரு. இப்போ அதே கதைதான் இங்கே நடக்குது. அம்மா இருந்த மாதிரி இப்போ தினகரன் இருக்காரு. அதே பூங்குன்றன் இடத்துல ஜனார்த்தனன் இருக்காரு. அம்மாகிட்ட பொறுமையாக இருந்த மாதிரியெல்லாம் தினகரன்கிட்ட யாரும் இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டி, மீடியா முன்பு அவங்க பண்ற அநியாயத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துடலாம்னு முடிவுக்கு வந்துட்டோம்” என்று சொன்னார்கள் அங்கிருந்தவர்கள்.

இதெல்லாம் உளவுத் துறை மூலமாக முதல்வர் கவனத்துக்கும் போக, ‘யாரெல்லாம் அதிருப்தியில் இருக்காங்களோ அவங்க லிஸ்ட் உடனே எனக்கு வேணும்’ என விபரங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. அஷ்டமியில் வேண்டுமானால் தினகரன் பேசாமல் இருக்கலாம். ஆனால், தினகரனைப் பற்றி அவரது ஆதரவாளர்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாதுபோல!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

“அட தினகரன் கட்சிக்குள் இவ்வளவு குழப்பமா?” என்று கமெண்ட் போட்டு, ஸ்டேட்டஸை காப்பி செய்து ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 21 ஜூலை 2018