மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: மினிமலிசம் என்னும் சொல்!

சிறப்புக் கட்டுரை: மினிமலிசம் என்னும் சொல்!

சந்தோஷ் நாராயணன்

புதிய தொடர்: மீச்சிறு காட்சி 1

நான் அடிப்படையில் ஓவியன். ஓர் ஓவியனாக அலங்காரமும், அதீத வேலைப்பாடுகளும் கொண்ட ஓவிய முறைகளிலிருந்து சலித்து விலகி யோசிக்க ஆரம்பித்த என்னை மினிமலிசம் வசீகரித்தது தற்செயலானது அல்ல. ஓவியக் கல்லூரி முடித்த பிறகு இலக்கியப் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைக்க ஆரம்பித்தபோது படங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நிறைய இடைவெளிகளைக் கொண்ட வடிவமைப்புகளை முன்னட்டைகளில் செய்வது எனக்குப் பிடித்த பாணியாக இருந்தது. விளம்பரத் துறையில் இயங்கிக்கொண்டிருந்த எனக்கு எதையும் ‘சுருக்கமாகச் சொல்’ என்கிற தாரக மந்திரம் அத்துறையிலிருந்தும் என்னையறியாமல் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக ஒரு நிறுவனத்தின் உள்ளடக்கத்தை ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்ட ‘லோகோ’வில் சொல்ல வேண்டிய கட்டாயம் அங்கே உண்டு. அப்போதெல்லாம் மினிமலிசம் என்கிற சொல்லாடலை நான் யோசித்தது இல்லை.

ஆனால், மினிமலிச பாணியிலான டிஜிட்டல் ஓவியங்களை நான் 2014 வாக்கில் தொடர்ந்து வரைய ஆரம்பித்ததும், அதற்குச் சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவும் அந்த பாணியைப் பற்றிய தேடலை என்னுள் அதிகப்படுத்தியது. அதே நேரம் அறமற்ற அதீத நுகர்வு கலாச்சாரத்தின் மீதிருந்த ஒவ்வாமை, மினிமலிசம் என்பது கலை சார்ந்த ஒரு கோட்பாடு மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை என்கிற அறிதலுக்கும் என்னைக் கொண்டு சேர்த்தது.

மேற்கத்தியக் கலைப் பாணி என்கிற வகையில் மினிமலிசம் எனக்கு அறிமுகமானாலும், அது எல்லா காலத்திலும் மானுடத்தின் நன்மை நோக்கிப் பேசிய அனைவருக்கும் ஒரு கருவியாகவும் இருந்திருக்கிறது. குறுகத் தறித்த குறளைச் சொன்ன வள்ளுவனிலிருந்து சிறு காட்சிகளின் மூலம் வாழ்வியலை, தத்துவத்தைச் சொல்கிற பாஷோவின் ஹக்கூக்கள் வரை மினிமலிசம் படர்ந்து நிற்பதை இன்று கண்டுகொள்கிறேன்.

அலங்காரங்களும் பகட்டும் எங்கெல்லாம் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் அதிகாரம் செயல்படும். அல்லது அதிகாரத்தின் மொழியாக இவை இருக்கின்றன. ஹிட்லரின் பிரமாண்டமான கட்டடப் பாணி அதற்கோர் உதாரணம். ஆனால், மினிமலிச பாணி கட்டடக் கலை எழுந்து வந்தபோது அது கட்டட வடிவமைப்புகளில் முற்றிலும் அலங்காரத்தையும், பிரமாண்டத்தையும் தவிர்க்க ஆரம்பித்தது. ஆக, மினிமலிசம் என்பது அதிகாரத்திற்கான ஓர் எதிர் செயல்பாடாகவும் இருக்கிறது. அது கலை மட்டுமின்றி உணவு உடை முதல் அரசியல் வரை பிரதிபலிக்கிறது. காந்தி எப்படி ஒரு மினிமலிஸ்டாக இருந்தார் என்பது போன்ற உதாரணங்களை பிறகு விரிவாகப் பார்க்கலாம்.

Less is more என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தப் பார்வையிலிருந்து மினிமலிசம் குறித்த எனது கவனிப்பையும் தேடலையும் வரலாறு, கலை, இலக்கியம், அரசியல் என்று எல்லாத் தளத்திலும் விரிக்க முனைகிறேன். வெறும் மினிமலிசம் குறித்த தகவல் கட்டுரையாக இல்லாமல் அதைச் சார்ந்த எனது தனிப்பட்ட அவதானிப்புகளை, அது நமது வாழ்முறையில் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தையும் சேர்த்துப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதுவே ‘மீச்சிறு காட்சி’ என்னும் இத்தொடர்.

(காண்போம்)

(தொடரின் அடுத்த கட்டுரை அடுத்த செவ்வாய்க்கிழமை)

சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

செவ்வாய், 17 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon