மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

காப்பகக் குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரிகள் கைது!

காப்பகக் குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரிகள் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவன குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்னை தெரசாவினால் 1950ஆம் ஆண்டு ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதில் உலகெங்கும் 3000 கன்னியாஸ்திரிகள் தொண்டாற்றுகின்றனர். இந்த அறக்கட்டளை வாயிலாக தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மையம், பள்ளிகள், இலவச உணவு மையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களை அன்னை தெரசா தொடங்கினார்.

இந்த அறக்கட்டளையின் கீழ் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகம் திருமணம் ஆகாமல் சிறுவயதிலேயே தாயான சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளையின் தலைவரான கன்னியாஸ்திரி கொன்சிலியாவும், அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் பிறந்த மூன்று பச்சிளம் குழந்தைகளை தலா 50 ஆயிரம் வீதம் மூன்று தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்:

இந்த நிலையில், ஒரு தம்பதியினர் ராஞ்சி மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், தங்களிடம் ரூ.1.21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு காப்பக நிர்வாகிகள் ஒரு குழந்தையை வழங்கியதாகவும், பின்னர் சில காரணங்களைக் கூறி அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து, ராஞ்சி மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு, சம்பந்தப்பட்ட காப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது. அதற்கு, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவர்கள் மீது போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின் நடந்த விசாரணையில், காப்பக குழந்தைகள் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தம்பதியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, அந்தக் காப்பகத்தில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி கொன்சாலியா என்பவரையும், பெண் அலுவலர் அனீமா ஹிந்த்வார் என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணை:

இந்த நிலையில், ஜூலை 8ஆம் தேதி காப்பகத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அந்த காப்பகத்தில் 450 குழந்தைகள் பிறந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அவற்றில் 170 குழந்தைகள் பிறந்ததற்கு மட்டுமே அந்தக் காப்பகத்தில் முறையான ஆவணங்கள் இருந்துள்ளது. மீதமுள்ள 280 குழந்தைகள் பிறந்ததற்கு முறையான ஆவணங்கள் காப்பகத்தில் இல்லை. அதனால், அந்தக் குழந்தைகளும் வெளிநபர்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சர்ச்சைகள்:

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் டெல்லி பிரிவைச் சேர்ந்த ராஜீவ் துளி பேசுகையில், “இது மிகவும் தீவிரமான பிரச்சினை. மிஷினரி ஆஃப் சாரிட்டி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அன்னைத் தெரசாவால் நிறுவப்பட்ட கிறிஸ்தவ மிஷனரி அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ததாக அங்குள்ள கன்னியாஸ்திரி ஒருவரை மாநில பாஜக அரசு கைது செய்திருப்பதைக் கண்டிக்கும் வகையில் இருப்பதாகவும், களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருப்பதாகவும் பாஜக அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

போலீசார் வெளியிட்ட வீடியோ:

தொடர்ந்து இது சம்பந்தமான சர்ச்சைகள் வந்தநிலையில், தற்போது, குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக கைதான கன்னியாஸ்திரி குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், மூன்று குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, தனது உதவியாளருடன் இணைந்து விற்றதாகப் புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், இரண்டு பேரையும் கைது செய்தனர். ஆனால் ராஞ்சி பிஷப், குழந்தைகள் காப்பகத்தை நிர்வகிக்கும் அமைப்பை கிரிமினல் போல் போலீசார் நடத்துகின்றனர் எனவும், கன்னியாஸ்திரி அப்பாவி எனவும், போலீஸார் நெருக்கடி கொடுத்ததால்தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்டதை கன்னியாஸ்திரி ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கொன்சிலியா பேசுகையில், மூன்று குழந்தைகளை விற்றதாகவும், நான்காவது குழந்தையை இலவசமாக தத்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ஞாயிறு, 15 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon