மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

மக்கள் நீதி மய்யம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

மக்கள் நீதி மய்யம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சிக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கட்சியின் துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அதன் செயல்பாடுகளை தீவிரப்படுத்திவருகிறார் நடிகர் கமல்ஹாசன். தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றைப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் மனு அளித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி முறையாகப் பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று விழா இன்று (ஜூலை 12) சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, ‘மாற்றத்தை நோக்கிய பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக, மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட பின் இந்த கொடியேற்ற பெரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது” என்று தனது பேச்சைத் தொடங்கிய கமல்ஹாசன், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தனும், பொதுச்செயலாளராக அருணாச்சலமும், பொருளாளராக சுரேஷும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் தான் தலைவராக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் தற்காலிக உயர்நிலை குழு கலைக்கப்படுவதாகத் தெரிவித்த அவர் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலையும் வெளியிட்டார்.

”ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமரவேல், ஏ.ஜி.மவுரியா, எஸ்.மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொண்டர்களும் நிர்வாகி்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

நிர்வாகிகள் பெயரை அறிவித்த பிறகு மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக் கொடியை கமல்ஹாசன் ஏற்றிவைத்தார். அப்போது கட்சியின் பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் ”தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளோம் என்று கூறிய கமல், இரு தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி என்று நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் பெயரையும் வாசித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று நிகழ்வினைக் காண ஏராளமானோர் அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடியதால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon