மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

அனைவருக்கும் இலவச இண்டர்நெட்!

அனைவருக்கும் இலவச இண்டர்நெட்!

இணையச் சமநிலை மூலம் இந்தியாவில் இலவச மற்றும் திறந்தவெளி இணையச் சேவையை வழங்க மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.

இணையச் சேவையை முடக்குதல், அதிவேக இணையப் பயன்பாடு அளித்தல் ஆகியவற்றில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காட்டிவரும் பாரபட்சங்களுக்குத் தடை விதிக்கக் கோரி 8 மாதங்களுக்கு முன்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்திருந்தது. இதற்கு நேற்று (ஜூலை 11) தொலைத் தொடர்பு ஆணையத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இனி இணையச் சேவை வழங்குவதில் எந்த ஒரு நிறுவனமும் பாரபட்சம் காட்டமுடியாது.

இதுகுறித்து தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறுகையில், "டிராயின் பரிந்துரையை ஏற்று இணையச் சமநிலைக்கு இன்று (ஜூலை 11) தொலைத் தொடர்பு ஆணையத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. டெலிகாம் துறையின் கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு கொள்கை என்ற புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கான ஒப்புதலும் நேற்று கிடைத்துள்ளது. இந்த கொள்கையின் மூலம் இந்தியாவில் 2020ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் முதலீடுகளும், அதிக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon