மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 2)

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 2)

பிரகாசு

முதல் பாகத்தில் சேலத்தில் சாலை முடிவுறும் பகுதியில் வசிக்கின்ற விவசாயிகளின் நிலையையும், 8 வழிச் சாலை குறித்த அவர்களின் கருத்துகளையும் கண்டோம். இந்த இரண்டாவது பாகத்தில், எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் திருவண்ணாமலையின் நிலவரம் குறித்தும், சமூக ஆர்வலர்களின் கருத்துகள் குறித்தும் காண்போம்.

திருவண்ணாமலையில் எதிர்ப்பு:

ஒட்டுமொத்தச் சாலையின் நீளத்தில் 45 விழுக்காடு திருவண்ணாமலையில் வருகிறது. இந்த மாவட்டத்தில்தான் இத்திட்டத்துக்கு உச்சபட்ச எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதற்குக் காரணம், இந்த மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்தில் 860 ஹெக்டேர் விவசாய நிலங்களாகும். இந்த நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செங்கம் தாலுகாவைச் சேர்ந்த கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டவர் விநாயகம். முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் முழுநேர விவசாயம் செய்து வருகிறார். அமைக்கப்படவுள்ள 8 வழிச் சாலையால் இவரது 6 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் 30 சென்ட் நிலம் பறிபோகவுள்ளது. குப்பநத்தம் அணையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ள வயல் என்பதால் நிலத்தடி நீருக்கு இங்கே எப்போதும் பஞ்சமில்லை. முப்போகம் விளையும் பூமியில் 2.30 ஏக்கர் அல்ல, ஒருபிடி மண்ணைக்கூடத் தங்களால் தர இயலாது என்கிறார் விநாயகம்.

"அவுங்க கேட்கற ரெண்டு ஏக்கர்லதான் மொத்த நிலத்துக்கும் தண்ணி பாய்ச்ச ஒரு கிணறும், ரெண்டு போரும் இருக்கு. இத பிடிங்கிட்டா நான் புதுசா கிணறு வெட்டி, போர் போட்டு விவசாயம் பண்ண முடியுமா? ஹெக்டேருக்கு 20 லட்சம் தர்றதா சொல்றாங்க. ஆனா இந்த 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தோட மதிப்பு ஒன்றரை கோடி வரும். 20 லட்சத்த வாங்கி கிணறு தோண்டவும், போர் போடவுமே பத்தாது. அதுவும் ஆத்த ஒட்டி கிணறு இருக்கு. ரோடு வந்துட்டா ஆத்துல இருந்து 300 அடிக்கும் அந்தப்பக்கம் கிணறு தோண்ட வேண்டியிருக்கும். அதனால ரோடு போட்டுட்டா இப்ப வர்ற மாதிரி கிணத்துல தண்ணி வருமான்னு தெரியல" என்கிறார் விநாயகம்.

எதிர்ப்புக்கு என்ன காரணம்?

சாலை என்பது அத்தியாவசியம்தானே, அதை ஏன் விவசாயிகள் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். தமிழகம் முழுவதும் எண்ணிலடங்காத சாலைத் திட்டங்கள் வேண்டியும், பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த வேண்டியும் மக்கள் கேட்பதை அவ்வப்போது செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் காணலாம். ஆனால் ’இந்த எட்டு வழிச் சாலை எங்களுக்குத் தேவையே இல்லை; வேண்டவே வேண்டாம்’ என்று விவசாயிகள் கூறுகிற நிலையில் வலுக்கட்டாயமாக அதை நிறைவேற்றியே தீருவோம் என்று நிலத்தைப் பிடுங்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதுதான் இந்தத் திட்டம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

அதேபோல இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் யார், எதிர்ப்பவர்கள் யார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டம். அதனாலேயே மோடி அரசுக்கு ஆதரவான அனைவரும் இந்தத் திட்டத்தை உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றுகூறி ஆதரிக்கின்றனர். இங்கே ஒன்றை நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது. காடுகளை அழித்து, வேளாண் பூமியை அழித்து, குடியிருப்புகளை அகற்றி, மலைகளைக் குடைந்து அமைக்கப்படும் இந்த எட்டு வழிச் சாலையை ஆதரிக்கும் மோடி ஆதரவாளர்கள்தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலிலுள்ள மணல் திட்டை இடிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றபோது, அது ராமர் பாலம், எனவே இந்தத் திட்டம் கூடாது என்றார்கள். எப்போதும் போல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக இயக்கங்களும்தான் இப்போதும் மக்களுடன் இணைந்து இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

சாமானியனுக்கா, சகலமும் உடையவனுக்கா?

இந்தத் திட்டம் குறித்த பேச்சுக்கள் எழத் தொடங்கியது முதல் அரசுத் தரப்பில் அனைவரும் முன்வைக்கும் ஒரு முக்கியமான வாதமாக இருந்தது, 'இது மக்களுக்கான சாலை' என்பதுதான். இப்போது அந்த மக்கள் யார் என்பதுதான் அனைவருக்கும் எழும் சந்தேகம். பொதுவாகவே எக்ஸ்பிரஸ் வே (விரைவுச் சாலை) வழித்தடங்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. இத்தகைய சாலைகளில் ஆட்டோக்கள், சைக்கிள்கள், நெல் வண்டிகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதியே கிடையாது. பேருந்துகள், மகிழுந்துகள், கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை மட்டுமே செல்ல இயலும்.

"ரூ.10,000 கோடி செலவு செய்து யாருக்கு இந்த சாலையைப் போடுகிறார்கள்? மக்களுக்காகவா? இது கனரக வாகனங்கள் செல்ல மட்டும்தான் பயன்படும். சாமானிய மக்களுக்குப் பயன்படாது" என்கிறார் அபிராமன். வழக்குரைஞரான இவர் எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் போராடி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார். மற்ற சாலைகளைப் போலல்லாமல் எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். நாம் இப்போது பயணிக்கும் எந்தச் சாலையிலும் மோட்டார் சைக்கிள்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தியதில்லை.

இந்தச் சாலையில் சேலம், அரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் மட்டுமே வெளியேறவும், உள்நுழையவும் இயலும். அதுபோக ஆறு முதல் எட்டு சுங்கச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. "எக்ஸ்பிரஸ் வே வழித்தடங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பெறப்படும் கட்டணமே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் நிலையில், அதைவிடப் பெரும் தொகை கொடுத்து எட்டு வழிச் சாலையில் சாமானியனால் பயணிக்க இயலுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் அபிரமான்.

இரண்டாகப் பிளக்கும் சாலை:

இந்த எட்டு வழிச் சாலை அமைக்கப்படவிருக்கிற 277 கிலோ மீட்டர் தொலைவுக்கும், சாலையின் இருபுறமும் 15 அடி உயரமுள்ள சுவர் எழுப்பப்படவுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எங்கும், யாரும் சாலையைக் கடக்க இயலாது. 22 இடங்களில் மட்டுமே சாலையைக் கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. "இந்தத் திட்டத்தால் வழி நெடுகிலும் உள்ள விவசாயிகளின் நிலம் இரண்டாகப் பிரியும். விவசாயிகள் சாலைக்கு மறுபுறம் உள்ள தங்களது நிலத்துக்கு செல்ல வேண்டுமென்றால், சாலையில் எங்கே சுரங்கப் பாதை வருகிறதோ, அங்கே சென்றுதான் கடந்து வர வேண்டும். ஒரு விவசாயி, அவனுடைய நிலத்துக்குச் செல்ல இவ்வளவு பெரிய கொடுமையை அவன் மீது திணிப்பது நியாயமா?" என்று கேள்வியையும் அபிராமன் முன்வைக்கிறார்.

சாலையின் மற்றொரு புறம் துண்டாகவிருக்கிற தனது ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு எங்கே போய் சுற்றி வர வேண்டுமோ என்பதுதான் மோகனசுந்தரத்திற்கும் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. "பத்து கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் சுரங்கப் பாதை வந்தா, எதிர்ப்பக்கம் இருக்கிற என் நெலத்துக்கு எப்படிங்க போவேன்?" என்கிறார் மோகனசுந்தரம். 277 கிலோ மீட்டருக்கு 22 சுரங்கப்பாதைகள் மட்டும்தான் என்றால் சராசரியாக 12 கிலோ மீட்டருக்கு ஒரு சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்று கணக்கில் கொள்ளலாம். மேற்கொண்டு மேம்பாலங்கள் கட்டுவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆக சாலைக்கு இருபுறமும் வாழும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே இது மிகப்பெரிய பாதிப்பு என்கிறார் அபிராமன்.

பொய் சொல்லும் முதல்வர்!

விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலம் கொடுக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையிலும், ஊடகங்களிலும் கூறினார். சேலம் மாவட்ட ஆட்சியரும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் கூட இதே கருத்தை முன்வைத்தார்கள். இதுகுறித்தும் நாம் சந்தித்த விவசாயிகளிடம் கேள்வியேழுப்பினோம். "முதல்வர் சொல்றதுலாம் சுத்தப் பொய்ங்க. ஒரு விவசாயிகூட நிலத்தக் குடுக்க மாட்டோம். இவங்க எங்கள மிரட்டித்தான் கல் நட்டாங்க. எதோ நாங்களா சம்மதிச்சு கல் நட விட்ட மாதிரி சேலம் கலெக்டர் ரோகிணி டிவில சொல்றாங்க" என்கிறார் மணிகண்டன்.

மோகனசுந்தரம் கூறுகையில், "எங்க ஊரு கலெக்டர் ரோகிணியும், நம்ம முதல்வரு பழனிச்சாமியும் டிவில சொல்றதுலாம் பொய்ங்க. நாங்க யாரும் இதுவரைக்கும் நெலத்த குடுக்குறதா சொல்லவே இல்லைங்க. எங்க நெலத்துல நாங்க கல் நடவே விடல. தென்ன மரத்துலதான் குறிச்சு வச்சிட்டு போயிருக்காங்க. அப்படியிருக்கிறப்ப எப்படிங்க நெலத்த குடுப்போம்னு சொல்லுவோம்?" என்கிறார்

"விவசாயிகள் எங்கும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை என்று பச்சையாகப் பொய் சொல்கின்றனர் மாவட்ட ஆட்சியரும், தமிழக முதல்வரும். திருவண்ணாமலையில் ஒரு மாதத்துக்கு முன்பே இந்த 8 வழிச் சாலை எங்களுக்கு வேண்டாமென்று விவசாயிகள் இணைந்து 371 மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கு நேரில் சென்று அளித்திருக்கிறார்கள். இந்த மனுவின் நகலைப் பதிவுத் தபாலில் பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர், உள்ளூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் அனுப்பியிருக்கிறார்கள். இதைப் பெற்றுக் கொண்டுதான் விவசாயிகள் எதிர்க்கவில்லை என்று பொய் பேசுகிறார்கள்" என்கிறார் அபிராமன்.

எரிபொருள் செலவு குறையுமா?

எட்டு வழிச் சாலையால், எரிபொருள் செலவு குறையும் என்றும், சக்கரங்களின் உராய்வுத் தன்மை குறைந்து, அதிக நாட்கள் உழைக்கும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். ஆனால் யாருடைய வாகனங்களுக்கு இந்தச் செலவுகள் மீதியாகும் என்று கேட்கிறார் அபிராமன். "எட்டு வழிச் சாலையில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கக் கூடிய வசதி படைத்தவர்களுக்குத்தான் முதல்வர் சொல்லும் எரிபொருள் செலவு மீதியாகும். இதற்கு மாறாகச் சாலை செல்லும் வழியில் இருக்கிற மக்கள் அனைவரும் இனி இந்தச் சாலையைக் கடந்து செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டும். அவர்களுக்கு எரிபொருள் செலவு இனி அதிகரித்துவிடும். அன்றாடம் கடந்து செல்கின்றவர்களுக்கு அதிகச் செலவும், என்றோ ஒருநாள் சென்னையிலிருந்து சேலத்துக்கும், சேலத்திலிருந்து சென்னைக்கும் செல்பவர்களுக்கு செலவைக் குறைப்பதும்தான் சிறந்த திட்டமா?" என்கிறார் அபிராமன்.

’சேலம் முதல் சென்னை வரை’ என்று சொல்லப்படும் இந்தச் சாலையானது போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்த சேலம் மாநகருக்குள்ளோ அல்லது சென்னை மாநகருக்குள்ளோ வரவில்லை. எஞ்சிய தொலைவைக் கணக்கிட்டால் இப்போதும் தோராயமாக 4 மணி நேரத்திற்குள் பயணித்துவிடலாம். வண்டலூரைத் தாண்டிய பிறகு சென்னைக்குள் பயணிக்கும் நேரம்தான் வாகன ஓட்டிகளுக்கு எப்போதும் கால விரயத்தை ஏற்படுத்துகிறது.

(இக்கட்டுரையின் கடைசிப் பாகம் மாலை 7 மணி அப்டேட்டில்...)

பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 1)

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon