மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சாதனை படைத்த பிறகு நகத்தை வெட்டியவர்!

சாதனை படைத்த பிறகு நகத்தை வெட்டியவர்!

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஸ்ரீதர், 66 ஆண்டுகள் வளர்ந்த நகத்தை நேற்று (ஜூலை 11) வெட்டியுள்ளார் .

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். இவர் 1952ஆம் ஆண்டு முதல் தனது இடது கை விரல்களின் நகத்தை வெட்டாமல் நீளமாக வளர்த்துள்ளார்.

66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களில் வளர்ந்துள்ள நகங்களின் வளர்ச்சி 909.6 சென்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டைவிரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 சென்டிமீட்டர் ஆகும். உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தைக் கொண்டவர் என்று 2016ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

உலகளவில் அற்புதமான, விநோதமான நபர்களைப் பற்றி நிகழ்ச்சிகளை நடத்திவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ’Ripley's Believe It or Not’ தொலைக்காட்சி நிறுவனம், ஸ்ரீதர் சில்லாலை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தது.

நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சில்லால் தனது 909.6 சென்டிமீட்டர் நீளம் கொண்ட நகத்தை வெட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ’Ripley's Believe It or Not' தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஸ்ரீதர் சில்லால் நகம் டைம்ஸ் சதுக்கத்தில்அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon