மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

அனுஷ்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்!

அனுஷ்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்!

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்பட உள்ளது.

பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கஜோல், கரண் ஜோஹர், ஷாருக் கான், வருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர், கேத்ரினா கைஃப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீட்சித் உள்ளிட்டோரின் சிலைகள் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் அனுஷ்காவின் கணவருமான விராட் கோலியின் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது.

அனுஷ்கா ஷர்மாவை கௌரவிக்கும் விதமாக மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் அவரது மெழுகு சிலையை சிங்கப்பூரில் நிறுவ உள்ளது. இதற்கு முன் அமைக்கப்பட்ட இந்திய பிரபலங்களின் சிலைக்கும் தற்போது அமைக்கப்படவுள்ள சிலைக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இந்த முறை அனுஷ்காவின் சிலை தனியாக அல்லாமல் சர்வதேச பிரபலங்களுடன் பேசிக்கொண்டிருப்பது போல் அமைக்கப்படவுள்ளது.

அமெரிக்க டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ஒப்ரா வின்ஃப்ரே, கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தய வீரர் லிவிஸ் ஹேமில்டன் ஆகியோருடன் அனுஷ்கா ஷர்மா கையில் மொபைல் போனுடன் பேசிக்கொண்டிருப்பது போல் சிலை அமைக்கப்படவுள்ளது.

இந்த வகையான சிலை இந்தியர் ஒருவருக்கு வைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon