மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

மோடிக்கு கின்னஸ்: காங்கிரஸ் பரிந்துரை!

மோடிக்கு கின்னஸ்: காங்கிரஸ் பரிந்துரை!

அதிகளவு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர் என்ற பட்டியலில் பிரதமர் மோடிக்கு விருது வழங்க வேண்டும் என்று கோவா காங்கிரஸ் சார்பில் கின்னஸ் அமைப்புக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். கடந்த 4 ஆண்டுகளில் 41 அரசுமுறை பயணம் மேற்கொண்ட அவர் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 165 நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் மோடி இருந்தார். இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. இந்தப் பயணத்திற்கு மட்டும் 31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், பிரதமர் மோடிக்கு விருது வழங்கக் கோரி கின்னஸ் அமைப்பிற்கு நேற்று (ஜூலை 12) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து 52 நாடுகளைச் சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உலக சாதனை படைத்துள்ளதால் அவரது பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க வேண்டும். மோடியின் பெயரை பரிந்துரைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

உலகின் எந்த பிரதமருமே தனது பதவிக்காலத்தில் இத்தனை நாடுகளுக்கு சென்றிருக்க மாட்டார். தனது செயல் மூலம் இந்தியாவின் எதிர்கால தலைமுறையினருக்கு பிரதமர் முன்மாதிரியாக விளங்குகிறார்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மோடியின் ஆட்சியில்தான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.03 ஆக குறைந்துள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon