மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

ரஞ்சித்துக்கு ரூட் போட்டுக் கொடுத்த மேவானி

ரஞ்சித்துக்கு ரூட் போட்டுக் கொடுத்த மேவானி

நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்க யார் மூலமாக ராகுலை ரஞ்சித் சந்தித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது.

அவர்கள் டெல்லியில் இதுபற்றி விசாரித்தபோது, குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிதான் ராகுல் காந்தியை சந்திக்க ரஞ்சித்துக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தார் என்று தெரிந்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் நாம் பேசியபோது,

“ஜிக்னேஷ் மேவானி கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவரும் எம்.எல்.ஏ. ஆனார். அவர் தேர்தலில் ஜெயித்தபோதே அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர் ரஞ்சித். பிறகு சென்னைக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார் ரஞ்சித். அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.

இந்த நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி மூலமாக ராகுல் காந்தியைச் சந்தித்து, தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்தது ஏன் என்பது பற்றி விளக்கியிருக்கிறார் ரஞ்சித். ஏற்கனவே திருமாவளவன் எம்.பி.யாக இருந்தபோது ராகுல் காந்தி அவரிடம் தமிழகத்தில் தலித் ஓட்டு வங்கி காங்கிரசை விட்டுப் போனது ஏன் என்று சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுபோல திருமாவளவனோடு பல முறை ஆலோசித்திருக்கிறார் ராகுல் காந்தி” என்றனர்.

மேலும், “ஜிக்னேஷ் மேவானியோடும் இதுபற்றி ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகத்தில் ரஞ்சித் என்பவர் இருக்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார் மேவானி. இதையடுத்து ராகுல் காந்தி, ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று மேவானியிடம் சொல்ல, அதன் பிறகே ரஞ்சித்திடம் தகவல் தெரிவித்து அவரை ராகுல் காந்தியிடம் அழைத்துச் சென்றுள்ளார் மேவானி” என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் புள்ளிகள்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon