மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

ராமநாதபுரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

ராமநாதபுரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் இன்று (ஜூலை 12) திரும்பப் பெறப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாக, கடந்த 5ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களைக் கைது செய்தது அங்குள்ள கடற்படை. இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அனைவரும், தற்போது சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும், இதுவரை கைப்பற்றப்பட்ட 186 படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள். இதனை முன்வைத்து, ஜூலை 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்துவந்தனர். இந்த வேலைநிறுத்தத்தால் கடுமையாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

நேற்று (ஜூலை 11) சென்னை தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர் ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள். அவரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்.

வேலைநிறுத்தம் முடிந்தாலும், மீனவர்கள் உடனடியாகக் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் அங்கு நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாகக் கடல் காற்றின் வேகம் அதிகமிருப்பதால், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப்பகுதிகளில் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon