மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

7 பேர் விடுதலை: ராகுல் நினைத்தால் நடக்கும்!

7 பேர் விடுதலை: ராகுல் நினைத்தால் நடக்கும்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டெல்லியில் நேற்று முன்தினம் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சந்திப்பின் போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ரஞ்சித் கேட்டதாகவும், அவர்களை விடுதலை செய்யத் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி சொன்னதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் 7பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராகுல் காந்தியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

”7பேரும் ஆயுள் தண்டனைக் காலத்தை விட கூடுதலாகவே சிறைவாசத்தை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிப்பது குறித்து அரசு உரிய முடிவு.செய்யலாம் என்று 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி அவர்களை விடுதலை தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

”நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுநர் ஆணையிட்டார். அதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று கூறியுள்ள ராமதாஸ், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், கடந்த 2017ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சோனியாவிடம் நீதிபதி தாமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் தானும் முன்வைப்பதாகவும், இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டுமெனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon