மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குச் சலுகை நிறுத்தம்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குச் சலுகை நிறுத்தம்!

யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு அரசு வழங்கி வந்த சலுகைகளை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் அரசாலும், தனியராலும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. யூ.பி.ஐ. தளத்தின் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கடைக்காரர்களுக்கு 1000 ரூபாய் வரையிலும், வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் வரையிலும் கேஷ் பேக் சலுகையாக வழங்கப்பட்டது. இனி இந்த கேஷ் பேக் சலுகை வழங்கப்படாது எனத் தேசிய கொடுப்பனவு கழகம் தெரிவித்துள்ளது.

பீம் செயலி வழியாகப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு 150 ரூபாய் மட்டுமே வெகுமதி வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தச் சலுகைக் கட்டணம் வழங்கும் திட்டம் 2017ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இச்சலுகையை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிப்பதாகவும் ஒன்றிய அரசு கூறியது. இதன்படி மாதத்திற்கு 100 ரூபாய்க்குக் குறைவில்லாமல் 20 பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு 25 ரூபாய் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சலுகைகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீம் செயலி வழியாகப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வெகுமதிகள் குறைக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

யூ.பி.ஐ. பரிவர்த்தனை தளத்தில் பீம் செயலியின் பங்கு ஒற்றை இலக்கத்தில் குறைந்துள்ளது. இந்தத் தளத்தில் உள்ள மற்ற முன்னணி செயலிகளான பேடிஎம், கூகுள் டெஸ் மற்றும் போன் பே போன்றவைதான் 80 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளன. ஜூன் மாதத்தில் யூ.பி.ஐ. தளத்தின் வழியாக 24.6 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் கூடுதலாகும். மதிப்பீட்டளவில் பார்த்தால் ஜூன் மாதப் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.40,834 கோடியாகும். முந்தைய மாதத்தில் இதன் மதிப்பு ரூ.33,289 கோடியாக இருந்தது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon