மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

நிதீஷ் - அமித் ஷா சந்திப்பு!

நிதீஷ் - அமித் ஷா சந்திப்பு!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை இன்று (ஜூலை 12) சந்தித்துப் பேசியுள்ளார்.

மக்களவைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக தற்போதே தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி மற்றும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார்.

பிகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற போதிலும் இருகட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதாதளத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் சிங், “2014 மக்களவைத் தேர்தலின் போதிருந்த சூழலும், 2019 தேர்தலுக்கான பிரச்சினைகளும் ஒன்றல்ல. பாஜக கூட்டணியை விரும்பாவிட்டால், பிகாரின் 40 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடலாம். இனி, தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாஜக தேவையில்லாத கருத்துகளை வெளியிட வேண்டாம். தலைப்புச் செய்திகளில் இடம்பெறத் துடிக்கும் மாநில பாஜக தலைவர்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அண்மையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் இணைந்தே 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 22 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எஸ்எல்பி கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சி, 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

எனவே, மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதற்கு பாஜக தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிதீஷ் குமாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்தான் நிதீஷை அமித் ஷா இன்று (ஜூலை 12) சந்தித்து பேசியுள்ளார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் நிதீஷுடன் இணைந்து அமித் ஷா சிற்றுண்டியும் அருந்தினார். கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷா இரவு மீண்டும் நிதீஷுடன் உணவு அருந்தவுள்ளார். இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon