மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

‘எழுமின்’ படக்குழுவுக்கு கேரள அமைச்சர் பாராட்டு!

‘எழுமின்’ படக்குழுவுக்கு கேரள அமைச்சர் பாராட்டு!

நடிகர் விவேக், தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த கேரள அமைச்சர், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி, எழுமின் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடியுள்ளார். டிரெய்லரை மே 21ஆம் தேதி நடிகர்கள் சிம்பு, கார்த்தி, விஷால் ஆகியோர் வெளியிட்டனர்.

டிரெய்லரை சமீபத்தில் பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி. மொய்தீன், கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் எம்.வி. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விவேக், “எழுமின் படக் குழுவுக்கு என் வாழ்த்துக்கள். இது ஒரு நல்ல தொடக்கம்! ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கி இருப்பது பெரு மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon