மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

ராஜனைப் புகழ்ந்த அரவிந்த் சுப்ரமணியன்

ராஜனைப் புகழ்ந்த அரவிந்த் சுப்ரமணியன்

செயல்படா சொத்து மதிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முனைப்பு காட்டியதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை அரவிந்த் சுப்ரமணியன் புகழ்ந்துள்ளார்.

முன்னாள் இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் இதுகுறித்து ஜூலை 11ஆம் தேதி பேசியதாக பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 'வங்கிகளின் செயல்படா சொத்து மதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வங்கிகளின் செயல்படா சொத்து மதிப்பைக் குறைக்கவும், அதற்குரிய தீர்வு காணவும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன் சிறப்பாகச் செயல்பட்டார். இந்தச் செயல்படா சொத்து விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவைப்படுகிறது. ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் வங்கி நெருக்கடிகளைக் குறைக்க பயன்பட்டன’ என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் வாரக் கடன் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற பாஜக அரசின் நாடாளுமன்றக் குழுவின் மதிப்பீட்டைத் தான் நம்பவில்லை என்றும், வங்கியாளர்களும் இதைக் கூறினார்கள் என்றும் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்குப்படி வங்கிகளின் செயல்படா சொத்து மதிப்பு ரூ.8.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பொதுத் துறை வங்கிகளின் செயல்படா சொத்து மதிப்பு ரூ.7.77 லட்சம் கோடியாகும். பெரு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதும், அதன் நிறுவனர்கள் வெளிநாடு தப்பிச் சென்று விடுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதே வங்கிகளின் செயல்படா சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகும்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon