மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்து விடுங்கள்!

தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்து விடுங்கள்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், அதை இடித்து விடுங்கள் என்று மத்திய அரசையும், உத்தரப் பிரதேச அரசையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. பளிங்கு மாளிகையான தாஜ்மகாலைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மகால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.

இதன் காரணமாக தாஜ்மகாலைப் பாதுகாக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். தாஜ்மகாலைப் பாதுகாப்பது குறித்த தொலைநோக்கு திட்ட அறிக்கையை ஜூலை 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. இதில், தாஜ்மகாலைப் பாதுகாப்பது தொடர்பாக, தொலைநோக்கு திட்ட அறிக்கையை அமைச்சகம் சமர்ப்பிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், "இந்தியாவில் தாஜ்மகால் தனித்துவம் மிக்கது. தாஜ்மகாலுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும்தான் இழப்பு. தாஜ்மகாலைப் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவது இல்லை. தாஜ்மகாலைக் காக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதை மூடிவிடுவோம் அல்லது நீங்களே அதை இடித்து விடுங்கள்" என்று கடுமையாக சாடினார்கள்.

மேலும், பாரிஸிலுள்ள ஈஃபில் கோபுரத்தை விட தாஜ்மகால் அழகாக இருப்பதாகவும், அதை வைத்து நமது அந்நிய செலாவணி பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

"ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் பேர் ஈஃபில் கோபுரத்தைப் பார்ப்பதற்குச் செல்கிறார்கள். நமது தாஜ்மகால் அதை விட எவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்கள் மட்டும் அதைப் பாதுகாத்திருந்தால், நம் அந்நிய செலாவணி பிரச்சினைகளைச் சுலபமாக தீர்த்திருக்க முடியும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், உங்களின் அலட்சியத்தின் மூலம் நம் நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தாஜ்மகால் மாசுபட என்ன காரணம், அதனைத் தடுப்பது எப்படி என்பதைக் கண்டறிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தாஜ் டிரெபீசியம் சோனின் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வருகிற 31ஆம் தேதி முதல் இந்த வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon