மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

திமுக ஆட்சியில் பல்லுள்ள லோக் ஆயுக்தா!

திமுக ஆட்சியில் பல்லுள்ள லோக் ஆயுக்தா!

திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா பல் உள்ளதாக, அதிகாரம் மிக்கதாக மாறும். அப்போது இன்றைய ஆட்சியாளர்கள் வசமாக சிக்கியிருப்பார்கள் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவை நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட, திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மசோதாவை பல் இல்லா லோக் ஆயுக்தா என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மேலும் லோக் ஆயுக்தாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்திருந்தனர்.

லோக் ஆயுக்தா மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 11) கடிதம் எழுதியுள்ளார். இதுவரை ஊழலுக்கு எதிராக திமுக ஆட்சிகாலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் விரிவாகப் பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவோம் என, பொதுமக்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது என்று நினைவுகூர்ந்துள்ளார். "தேர்தல் களத்தில் நடந்த சூதான (foul) விளையாட்டுகளால் வெறும் 1.1% வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியைத் தொடரும் வாய்ப்பினை அதிமுக பெற்றது. ஆனால், அது ஊழலை ஒழிக்கவோ, வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை அளிக்கவோ விரும்பாத காரணத்தால், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க முன்வரவேயில்லை" என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

"சட்ட முன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் திமுக வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது" என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், முதலமைச்சரோ இந்தப் பல் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவே நீடிப்பதுதான் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதுகாப்பானது என்ற காரணத்தால், தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதற்குத் தயங்குகிறார் - மறுக்கிறார் - புறக்கணிக்கிறார் என அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் வாயிலாக உணர முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

"உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவினால் விரைந்து வரும். அப்போது, அந்த சட்டத்திற்குப் பல் இருக்கும்; பவர் இருக்கும். அதன் காரணமாக, முன்னாள் ஆட்சியாளராகப் போகும் இந்நாள் ஆட்சியாளர்கள் அந்தப் பற்களின் வலிமையை உணரக்கூடிய இடத்தில் வசமாகச் சிக்கியிருப்பார்கள்" என்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon