மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா பேச்சுக்கு அர்த்தம் என்ன?

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா பேச்சுக்கு அர்த்தம் என்ன?

டி.எஸ்.எஸ். மணி

அமித் ஷா சென்னை வந்தார். விஜிபியில் பாஜக கட்சிக்காரர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் இருக்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா ஐந்து பேரை நியமித்து, ‘வாக்குச் சாவடி குழு’ ஒன்றை உருவாக்கி, அதற்கு சக்தி கேந்திரம் என்று சமஸ்கிருதம் / இந்தியில் பெயரிட்டு, இருபத்தைந்து வாக்குச் சாவடிகளை, ‘மஹா சக்தி கேந்திரம்’ எனப் பெயரிட்டு, இரண்டு கேந்திரங்களிலிருந்தும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அழைத்து வரச் சொல்லியிருந்தார். ஆனால், எந்த மாவட்டத்திலும் மாவட்டத் தலைமை முறையாக அத்தகைய கேந்திரங்களை ஏற்படுத்தாததினால், ஒரே வாக்குச் சாவடியிலிருந்து, ஐந்து பேரைக் கொண்டுவருவது போன்ற செயல்பாடுகள் எல்லா மாவட்டத்திலிருந்தும் நடந்தன. எப்படியோ, பத்தாயிரம் பேர் வரை கிழக்குக் கடற்கரைச் சாலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பதால் பாஜகவினர் திருப்தி அடைந்தனர்.

ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது எனக் கூறியவர்கள், கடைசியாக அமித் ஷா பேசிய பொதுக்கூட்டத்தை ஒளிபரப்ப ஊடகங்களை அனுமதித்தார்கள் என்றால், அவர் விரும்பிய ஒரு செய்தியை, தமிழ்நாடெங்கும் பரப்ப அது உதவிகரமாக இருக்கும் என்பதால்தானே? அது என்ன செய்தி?

ஆளும் அதிமுக அரசு, இந்தியாவிலேயே 'அதிக ஊழல் மிக்கது' என்று கூறினார். என் அப்படிக் கூறினார்? எல்லோருமே, ஆளும் அதிமுக அரசை, நடுவண் ஆட்சியில் இருக்கும் மோடி அரசாங்கத்தின், ஆதரவு அமைப்பு எனக் குற்றம்சாட்டி வரும்போது, யாருமே கூறாத ஒரு குற்றச்சாட்டை ஏன் அமித் ஷா கூறினார்? யாரைத் திருப்பதிப்படுத்த அப்படிக் கூறினார்? எந்தக் கட்சியின் மீது செல்வாக்கு செலுத்த அதைக் கூறினார்? புதிதாக எழுந்துவரும் ரஜினி கட்சியையோ, கமல் கட்சியையோ தங்கள் பக்கம் திருப்பக் கூறினார் என்று நாம் எண்ணலாம். அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால், அது மட்டும்தான் அமித் ஷாவின் திட்டமாக இருக்குமா?

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றால் என்ன?

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி வரும் எனக் கூறியதுதான் ஊடகங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது. ஏற்கனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆளும்போது, திமுக அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது, தமிழ்நாட்டில் நடைபெற்ற திமுக ஆட்சியை 2001ஆம் ஆண்டு வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்று அழைக்க முடியுமல்லவா? அதுபோல திமுகவுடன், பாஜக கூட்டு சேரும் என்று சிலர் ஆரூடம் கூறிப் பார்க்கின்றனர். ஆனால் இன்று திமுக தலைமை எடுத்துள்ள தேர்தல் நிலைப்பாட்டில், அப்படி ஒரு சாத்தியப்பாடே இல்லை என்பதாகத் தெரிகிறது.

அப்படியானால் எந்த முகாந்தரத்தில், அமித் ஷா அப்படிப் பேசினார்? டிடிவி அணியை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, பாஜக தன்னுடன் கூட்டணி சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லை என்ற அளவுக்கு தினகரனும் பாஜக எதிர்ப்பு நிலையே எடுத்துள்ளார். அப்படியானால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருடன் அமைக்க உள்ள கூட்டணியை, அமித் ஷா சுட்டிக் காட்டினார்?

இதுவே இன்று காட்சி ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது.

அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அந்த அளவுக்கு முக்கியமானதா? கர்நாடகாவிலோ, கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ, சட்டமன்றத் தேர்தலில், எதிர்பார்க்கும் அளவுக்குச் சிறிதேனும், அவர் தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பாரா? மாட்டார் என்பதே அனைவருடைய பதிலாக இருக்கும். அப்படியென்றால் , அவர் ஏன் தமிழ்நாட்டில், தேஜகூ ஆட்சி என்று கூறினார்?

அமித் ஷாவுக்கோ, மோடிக்கோ வருகின்ற மக்களவைத் தேர்தல்தான் மிக முக்கியமான குறிக்கோள். மீண்டும் மோடி தலைமையில் ஆட்சியை அமைக்க, காங்கிரஸ் கட்சி ஒரு சவாலாக அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், மாநிலக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் சவாலாகத் தோன்றினாலும், மொத்தத்தில், ஆர்எஸ்எஸ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காய் நகர்ந்தாலும் அவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அத்தகைய நேரத்தில், தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான, சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, அசாம் கண பரிஷத் ஆகியவை ஒவ்வொன்றாகக் கழன்றுகொண்டு இருக்கும்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், இரு மனதோடு அலைபாயும்போது, எந்த அளவுக்கு ஒரு வலுவான கூட்டணியை மக்களவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே கட்ட முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி

ஆகவே, அவர்கள் மக்களவையில் தனிப் பெரும்பான்மை எண்ணான 272 தொகுதிகளைத் தங்கள் கட்சி மட்டுமே வெல்ல முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்த்திருப்பார்கள். அது அநேகமாக சாத்தியமற்றது என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆகவே அவர்கள், மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைப் பற்றித்தான் அதிகமாகத் திட்டமிட முடியும் என்ற சூழல் உள்ளது. அத்தகைய கூட்டணிக்கு, காங்கிரஸ் கட்சி, பிற மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து முயற்சிக்கும் என்பதும் தெரியும். ஆகவே தாங்கள் இப்போதே, அதாவது, மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, மக்களவைத் தேர்தலுக்கு பின்னால் வரக்கூடிய கூட்டணி பற்றி யோசித்து வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.

அதற்காக, நெருங்க முடிந்த மாநிலக் கட்சிகளுடன் அல்லது வெற்றி வாய்ப்புள்ள மாநிலக் கட்சிகளுடன், நட்பு இல்லாவிட்டாலும் பகை இல்லாமல் இருக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். உதாரணமாக, பிகாரில் நிதிஷ் குமாருடன் பேசுவது, மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் பேசிப் பார்ப்பது, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியையாவது இணைத்துக்கொள்வது, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சிறிய, புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னே வெற்றி பெற்று வருவோருடன் தொடர்புகொள்வது என்று முயற்சிப்பதே ஒரே வழியாக இருக்கும். அவ்வாறு அவர்கள் திமுகவையும் தினகரன் கட்சியையும் தேர்வு செய்யலாம்.

மக்களவைத் தேர்தலில், மோடி தலைமையிலான பாஜகவினர் பெரும்பான்மைக்குச் சில அல்லது பல தொகுதிகளைக் குறைவாகப் பெற்றார்கள் என்றால், வெற்றி பெற்ற மாநிலக் கட்சிகள் எவ்வளவு எண்ணிக்கையைப் பெற்றிருந்தாலும், அவர்களையும் சேர்த்துக்கொண்டு, கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனச் சிந்திக்கலாம். அவ்வாறு கூட்டணி ஆட்சிதான் இந்தியாவின் வருங்காலம் எனும் நிலையில், தமிழ்நாட்டின் இரண்டு வாய்ப்புள்ள மாநிலக் கட்சிகளையும், தங்களது நட்பில் வைத்துக்கொள்ள, பலவீனமாகி வருகின்ற ஆளும்கட்சியை விமர்சிப்பதோ, அர்ச்சனை செய்வதோ, அவர்களது தொடக்கப் பணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு தமிழ்நாட்டின் ஒரு மாநிலக் கட்சியோ, அல்லது இரு மாநிலக் கட்சிகளோ, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து, 'வலுவான மத்திய ஆட்சியை' அமைக்க முன்வருவார்களானால், அதையே தாங்கள் இந்த நாட்டின் இக்கட்டான சூழலில் செய்ய வேண்டிய, 'நாட்டுப்பற்றுக் கடமை' என்று கூறுவார்களானால்,அந்தக் கூட்டணிக்குப் பெயர், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதாகத்தானே இருக்கும்? அத்தகைய கூட்டணியின் அங்கமாக ஆகிவிடும் ஒரு கட்சி, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுமானால், அதுவே, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதானே? அதுதான், அமித் ஷாவின் சென்னை வருகையில் தென்பட்டுள்ளதா என்ற கேள்விதான் எழுகிறது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: [email protected])

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon