மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சீன பாலியஸ்டர் நூலுக்கு வரி!

சீன பாலியஸ்டர் நூலுக்கு வரி!

உள்நாட்டுத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீன பாலியஸ்டர் நூலுக்கு இந்தியா இறக்குமதிக் குவிப்பு வரியை விதித்துள்ளது.

சீனாவிலிருந்து குறைந்த விலையில் பாலியஸ்டர் நூல் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டுத் தொழில் துறையினர் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விலை குறைவான பாலியஸ்டர் இறக்குமதி விவகாரம் தொடர்பாக வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வு அமைப்பான இறக்குமதிக் குவிப்பு வரி பொது இயக்குநரகம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை குறைவான பாலியஸ்டர் நூலால் உள்நாட்டுத் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதலால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டர் (ஆட்டோமொபைல் மற்றும் இதர தொழில்களில் பயன்படுத்தப்படும் பாலியஸ்டர்) நூலுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு டன்னுக்கு 174 டாலர் முதல் 528 டாலர் வரை இறக்குமதி குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக் குவிப்பு வரி பொது இயக்குநரகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சீனப் பாலியஸ்டர் நூலுக்கு இறக்குமதிக் குவிப்பு வரியை மத்திய நிதியமைச்சகம் விதித்துள்ளது. High Tenacity Polyester Yarn என்ற தொழில் துறை சார்ந்த பாலியஸ்டர் ரகம் டயர் நூல், சீட் பெல்ட், கன்வேயர் பெல்ட், தானியங்கி ஹோஸ் போன்ற பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் குவிப்பு வரி ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த வரி இந்திய ரூபாய்களில் செலுத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon