மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்!

சிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்!

அ.குமரேசன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் வாதத்தின் உள்நோக்கம் என்ன?

ஜனநாயக அரசியலின் அடிப்படைச் செயல்பாடாகிய தேர்தல் சுதந்திர இந்தியாவில் 1952இல் முதன்முதலில் நடந்தது. நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த 66 ஆண்டுகளில், மாநிலப் பகுதிகள் இணைக்கப்பட்டது, மாநில அரசுகள் கலைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெவ்வேறு காலத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கத்திற்கு வந்துவிட்டது, இப்போது எல்லாவற்றையும் அழித்துவிட்டு முதலிலிருந்து கணக்கை ஆரம்பிக்குமாறு சட்ட ஆணையம் சொல்கிறது.

ஒரே நேரத் தேர்தல் சரிதான் என்று வாதிடுகிறவர்கள் முன்வைக்கிற முதல் வாதம், வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்தப்படுவதால் அரசுக் கருவூலத்திற்கு நிறைய செலவாகிறது. அந்த வீண் செலவுகளைத் தவிர்க்க ஒரே நேரத் தேர்தல் தேவை என்கிறார்கள். ஓர் அலுவலகத்திலிருந்து அல்லது ஒரு நிகழ்ச்சியின் முடிவில் நாலைந்து பேர் வெவ்வேறு இடங்களுக்குப் புறப்படுகிறார்கள் என்றால், செலவைக் குறைப்பதற்காக ஒரே வண்டியில் அனுப்பிவைக்கப்பட்டு ஆங்காங்கே இறக்கிவிடப்படுவார்கள். அப்படியான ஓர் ஏற்பாடுதானா தேர்தல்?

மக்களின் ஒரே உரிமை

நாட்டின் தலைமையாகிய அரசு, அதன் அங்கங்களாகப் பல்வேறு நிர்வாகப் பிரிவுகள், அவற்றின் செயல்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படை ஜனநாயக அரசியல்தான். முதலாளித்துவக் கட்டமைப்பு சார்ந்த ஜனநாயகம்தான் இது. யாராக இருந்தாலும், ஒருவருக்கு ஒரே ஒரு வாக்குரிமைச் சமத்துவம் என்ற கவர்ச்சிகரமான, இதர ஏற்றத்தாழ்வுகளைத் திரையிட்டு மறைக்கிற ஏற்பாடு இதிலே இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், மக்களுக்குக் கிடைத்திருக்கிற அடிப்படை ஜனநாயக உரிமை இன்று இதுதான்.

உயிரோடு இருக்கவும், செயல்பட்டுக்கொண்டே இருக்கவும் உடல்நலத்திற்காக என எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். அது போலத்தான், ஜனநாயக நலன் காக்கப்படவும், குடிமக்களிடையே ஜனநாயக உணர்வு வேரூன்றவும், நாடு முழுவதும் ஜனநாயக மாண்பு வலுப்பெறச் செய்யவும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி ஒதுக்கலாம். வெறும் செலவுக் கணக்கு பார்க்கிற விஷயம் அல்ல இது. ஆட்சியாளர்களுக்குப் புரிவதுபோலச் சொல்ல வேண்டுமானால், நாட்டின் பாதுகாப்புக்குச் செலவு செய்வதில் எப்படி லாப நட்டக் கணக்கு பார்க்க முடியாதோ அப்படித் தேர்தல் செலவையும் கணக்கிடக் கூடாது.

ஓர் ஏழைத் தாய் தன் குழந்தையைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காகத் தனது சொற்ப வருவாயிலிருந்து கூடுதலாகப் பணம் செலவிடவும் அதை ஈடுகட்டக் கூடுதலாக உழைக்கவும் தயாராக இருக்கிறார். குழந்தையின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவதில் அந்தத் தாய்க்கு இருக்கிற அக்கறை அரசுக்கு இருக்குமானால் ஜனநாயக நலனுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி யோசிக்காமல், செலவைக் குறைக்க என்ன வழி என்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்குமா?

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால் மிச்சமாகும் நிதியைப் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். அதைவிடவும் கையாலாகத்தனத்தை காட்டிக்கொடுக்கிற வாதம் வேறு எதுவும் இருக்க முடியாது. தேர்தலையே நடத்தாமல் இருந்தால் அவ்வளவு நிதியும் மிச்சமாகும்! அப்படியே அதை வளர்ச்சிப் பணிகளுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் மடை மாற்றிவிடலாம்! மக்களாட்சி மாண்பையே காணாத, தேர்தல் வாசனையே அறியாத சர்வாதிகார ஆட்சிகளில் என்ன வளர்ச்சித் திட்டங்கள், சமூகநலப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று இவர்களால் சொல்ல முடியுமா? அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடன்களாகவும் பட்ஜெட்டுகளில் வரிச் சலுகைகளாகவும் தாரை வார்க்கப்படுகிற நிதியை நிறுத்தி வைத்தாலே போதும், வளர்ச்சிக்கும் சமூகநலத்திற்கும் பல மடங்கு செலவிட முடியும்.

மாநில அரசு பாதியில் கவிழ்ந்தால்…

நிதிமுறை தாண்டி நடைமுறை சார்ந்த வேறு சிக்கல்களைப் பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சட்ட ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஓர் அரசு குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தாக வேண்டும் என்று நமது அரசமைப்பு சாசனம் எங்கேயும் சொல்லவில்லை. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் இருக்கலாம் அவ்வளவுதான். இதன் அர்த்தம் வெளியே நிகழும் அரசியல் சூழல் காரணமாகவோ, கட்சிக்கு உள்ளேயே நடக்கும் குத்து வெட்டுகள் காரணமாகவோ ஓர் அரசு இடை காலத்திலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம். மக்களின் கொந்தளிப்பு காரணமாகக்கூட அரச பீடத்தினர் கீழே இறங்க வேண்டிய கட்டாயம் உருவாகலாம்.

அப்படி ஓர் அரசு இடையிலேயே விடை பெற்ற பிறகு உடனடியாக மறு தேர்தல் நடத்தி மாற்றுக் கட்சியிடம் அல்லது அணியிடம் ஆட்சியை ஒப்படைப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைப்படி, அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது என்றால் அதுவரையில் அந்த மாநில மக்கள் தங்களுக்கான மாற்று அரசு இல்லாமல் இருக்க வேண்டுமா? அல்லது அதுவரையில் குடியரசுத் தலைவர் ஆட்சி புகுத்தப்பட்டு அதன் மூலமாக மத்திய ஆளும் கட்சி மாநில அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்குமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சுமுகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்றால், இந்த மாநில அரசைக் கலைத்துவிட்டு சட்டமன்றத்திற்கும் சேர்த்து ஒரே தேர்தலாக நடத்திவிடலாமா? அப்படித்தான் என்றால் அது அந்த மாநில மக்களின் தேர்வுரிமை மீது அவமானச் சேற்றை வீசியடிக்கிற வேலை அல்லவா?

பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் சூழலில் அத்தோடு சேர்த்து நடத்திவிடலாம் என்று நாடாளுமன்ற மக்களவையை இடையிலேயே கலைத்து ஒரே தேர்தலுக்கு கொண்டு போய்விடலாமா? கூட்டணித் தகராறு, சொந்தக் கட்சிப் பூசல் உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு கடையை மூடும் நிலை வரும்போது, மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படட்டும் என்று அந்த ஆட்சி தொடர அனுமதிக்கப்படுமா? அல்லது அவசர நிலை ஆட்சி அறிவிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் நேரடி நிர்வாகம் நடைபெறுமா?

இவற்றில் எது நடந்தாலும் அது ஜனநாயகப் படுகொலைதான். இதனால் மட்டும் கூடுதல் செலவுகள் ஏற்படாதா என்பது துணைக் கேள்வி.

நோக்கம்தான் என்ன?

பின் எதற்காக, மக்களவைத் தேர்தல் வருவதற்கு மாதங்கள் நெருங்கி கொண்டிருக்கிற நிலையில் மற்ற கட்சிகளுக்கு ஒரு நெருக்கடி கொடுப்பது போல இப்படி ஒரு விவாதத்தைச் சட்ட ஆணையம் தொடங்க வேண்டும்?

எனக்குத் தெரிந்து, நமது அரசமைப்பு சாசனத்தில் இந்திய அரசு என்றோ இந்திய ஒன்றிய அரசு என்றோதான் இருக்கிறதேயன்றி, மத்திய அரசு என்று இல்லை. மத்திய அரசு என்பது பயன்பாட்டில் ஏற்பட்டுவிட்ட ஒரு சொற்றொடர். அவ்வளவுதான். ஆனால், மத்திய ஆட்சிக்கு வருகிறவர்கள் தங்களை ஓர் அதிகார மையமாகக் கற்பித்துக்கொள்கிறார்கள். தாங்கள் நினைத்தபடியெல்லாம் செயல்படுவதற்கு மாநிலப் பிரிவினைகளும் மாநில அரசுகளின் அதிகாரங்களும் குறுக்கே நிற்பதாக நினைக்கிறார்கள். படிப்படியாக அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவித்துவிட்டால் தங்கு தடையின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கற்பனை செய்கிறார்கள். நேரு காலத்திலேயே இது இருந்தது என்றாலும் ஒப்பீட்டளவில் அது மட்டுப்பட்ட நிலையில்தான் இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அதிகாரக் குவிப்பு அதிகரித்தது. அவசர நிலை ஆட்சி அதன் உச்சம்.

ராஜீவ் காந்தி காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும் இந்தப் போக்கு தொடர்ந்தது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போகப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் மத்திய அதிகாரம் இறுக்கப்பட்டது. விதிவிலக்காக இருந்தவை கூட்டணி ஆட்சிகள்தான். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி இந்த விதிவிலக்கில் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை. உலகமய கார்ப்பரேட் நலன்கள் முதலுரிமை பெறும் காலகட்டத்தில் இது மேலும் தீவிரமாகிறது. திட்டக் குழுவை ஒழித்து நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது, இன்று பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துவிட்டு உயர் கல்வி ஆணையம் என்ற ஒன்றை ஏற்படுத்த முயல்வது என நரேந்திர மோடி அரசின் மத்திய அதிகாரக் குவிப்புத் தாகம் அடங்க மறுக்கிறது.

இந்தப் போக்கின் வெளிப்பாடுதான் இன்றைய ஒரே நாடு ஒரே தேர்தல் மாய வாதங்கள்.

ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற மதவாத அரசியல் நோக்கத்திற்கும் இந்த முழக்கம் தோதாக இருக்கிறது. நாட்டின் பரந்துபட்ட பன்முகப் பண்பாட்டுத் தளத்தை, நாட்டு மக்களின் மாறுபட்ட பண்பாடுகளை மதிப்பதில்லை என்பதன் இன்னொரு சாட்சியம் இது.

இந்தியாவில் மட்டுமல்ல, வேறு பல நாடுகளிலும் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களுக்கும் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடத்தப்படுகிற நடைமுறை இருக்கவே செய்கிறது. உலக வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு நாடாகச் சென்று வருகிற பிரதமருக்கு இது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

அரசமைப்பு சாசனத்தின் முன்னுரையிலிருந்து சீதாராம் யெச்சூரி ஒரு பத்தியை தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். "இந்திய மக்களாகிய நாங்கள் இந்த அரசமைப்பு சாசனத்தையும் இதன் விதிகளையும் உருவாக்கி, ஏற்றுக்கொண்டு, இதற்கு எங்களை ஒப்படைத்துக்கொள்கிறோம்" என்பது அந்த வரி. இதன் பொருள் நாட்டு மக்களுக்குத்தான் நாடாள வந்தவர்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே தவிர, அதிகார பீடத்திற்கும் அதன் தாறுமாறான கட்டளைகளுக்கும் மக்கள் அடிபணிந்திருக்கத் வேண்டியதில்லை என்பதுதான்.

மக்களின் பன்முகப் பண்பாடுகளை மேலே விழுந்த தூசுத் துணுக்குகள் எனக் கருதி சுண்டி எறிய முயலும் சக்திகள் இதைப் புரிந்துகொண்டால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது போன்ற, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்காது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected].

முந்தையக் கட்டுரை: ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா?-1

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon