மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

ஆப்பிள்: சேதத்தைத் தடுக்க வலைகள்!

ஆப்பிள்: சேதத்தைத் தடுக்க வலைகள்!

ஆலங்கட்டி மழையினால் பயிர் சேதம் அதிகளவு ஏற்படுவதால் ஆப்பிள் விவசாயிகள் தங்களது பழத் தோட்டங்களை வலைகளால் மூடி வருகின்றனர்.

இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகள் தங்களது பழத் தோட்டங்களை வலைகளைக் கொண்டு மூடி வருகின்றனர். ஆலங்கட்டி மழையைத் தடுக்க அவர்கள் பயன்படுத்தும் வலைகளுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரையில் செலவாகிறது. இதுபோன்ற வலைகளைக் கொண்டு ரொஹ்ரு, நர்கண்டா, ராம்பூர், ஜப்ள், கோட்காய் தியோக், கோட்கர், மற்றும் சோபல் போன்ற ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த தோட்டங்களைப் பாதுகாத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த வலைகள் அதிகளவில் உதவிகரமாக இருக்கின்றன என்றும், ஆப்பிள் மரங்கள் அதிக உயரத்திற்கு வளராமல் இருக்கவும் பயன்படுகின்றன என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலை இயக்குநர் மனோகர் லால் திமன், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “காலநிலை மாற்றத்தின் விளைவால், பயிர்களை ஆலங்கட்டி மழையிலிருந்து காக்க இதுபோன்ற வலைகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. வலைகளுக்கான தேவை அதிகரிப்பால் அரசு சார்பில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது” என்றார்.

இமாசலப் பிரதேசத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் 11 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில் பழ வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அம்மாநிலத்தின் ஆயிரக்கணக்கான மக்களின் பொருளாதாரம் பழ உற்பத்தி வாயிலாக ஈட்டப்படும் ரூ.4,500 கோடி வருவாயை நம்பியே உள்ளது. இந்நிலையில், ஆலங்கட்டி மழை போன்ற இடையூறுகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க வலைகள் பயன்படுத்தப்படுவது விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது