மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

அரசின் தோல்வியை வெளிக்காட்டிய சிஏஜி அறிக்கை!

அரசின் தோல்வியை வெளிக்காட்டிய சிஏஜி அறிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கைகள் தமிழக அரசின் தோல்வியை வெளிக்காட்டியுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசிநாளான ஜூலை 9ஆம் தேதி இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 2015ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, தமிழக அரசின் நிர்வாக தோல்வியே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் உள்ளிடை குறித்தும் அதில் கூறப்பட்டிருந்தது. சிஏஐ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிஏஜி அறிக்கையில் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாக தோல்விகள், அரசு கஜானாவிற்கு ஏற்படுத்திய பெருத்த நஷ்டங்கள் என்று தமிழக அரசின் ஒட்டுமொத்த தோல்விகளும் அணிவகுத்து நிற்பதாக கூறியுள்ள அவர், இந்த தோல்விகளும், காலியாகி கொண்டிருக்கும் அரசு கஜானாவும் அதிமுக அமைச்சர்களும், அதிமுக முதல்வர்களும் தமிழ்நாட்டில் கோமாளித்தனமான ஆட்சியை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் அடங்கிய ஒரு என்சைக்ளோபீடியாவாக சிஏஜி அறிக்கை உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர்மானக் கழகம் கொடுத்ததாலும், தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததாலும் இந்த மோசமான இழப்பைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்றும் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கோள் காட்டியுள்ள ஸ்டாலின், “செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவுப்படி 2015 டிசம்பர் 1 ஆம் தேதியன்று குறைந்தபட்சம் ஆறு மணி நேரங்களுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விட்டிருந்தால் போதும். ஆனால் 20,960 கன அடி நீரைத் திறந்து விட்டதோடு மட்டுமின்றி, 21 மணி நேரம் அப்படித் தொடர்ந்து அன்றைய தினம் தண்ணீரைத் திறந்து விட்டதால்தான் சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியது என்பதை சிஏஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மாநில அரசு கடன்கள் எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்கு வரும். அப்போது மிக மோசமான கடனாளி மாநிலமாக மாறி, தமிழகம் கடனில் மூழ்கி விடும் என்று சிஏஜி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 2014-2015 ஆம் ஆண்டில் 17.56 சதவிகிதமாக இருந்த மாநிலத்தின் கடன் 2016-17ல் 29.85 சதவிகிதமாக அபாயகரமான அளவிற்கு அதிகரித்துவிட்டதாகவும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 2014-15 ஆம் ஆண்டில் 20.88 சதவிகிதமாக உயர்ந்து ஒட்டுமொத்த நிதி மேலாண்மையும் அதிமுக ஆட்சியில் வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

“அம்மா உணவகத்திற்காக சப்பாத்தி செய்ய வாங்கிய 15 மெஷின்களில் 12 வேலை செய்யவில்லை, பந்தோபஸ்து பணிக்கான கட்டணங்களை உரிய காலத்தில் மாநில காவல்துறை தலைவர் மாற்றி அமைக்காததால் அரசுக்கு 97.92 கோடி ரூபாய் நஷ்டம், அரசின் மெத்தனத்தால் 1,120 கோடி ரூபாய் வணிகவரி இழப்பு, 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 2016-17 ஆம் ஆண்டில் 9366.11 கோடி ரூபாய் இழப்பு, மாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு” என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், இவற்றை எல்லாம் கூட்டிப்பார்த்தால் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருப்பது தெரிய வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டது தொடர்பாக குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon