மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தமிழ் படம் 2 தயாரிப்பாளர் மீது நடவடிக்கை?

தமிழ் படம் 2 தயாரிப்பாளர் மீது நடவடிக்கை?

‘சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார் விஷால் எனக் குறிப்பிட்டிருந்தோம்.

இதுகுறித்து நம்மை தொடர்புகொண்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி, “தமிழ் படங்கள் ரிலீஸ் செய்வதற்கான தேதி ஒதுக்கீட்டில் சங்க நிர்வாகிகள் சுயநல நோக்கத்துடன் செயல்படுவதில்லை. அது போன்றுதான் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கும் நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு முன்னரே இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை சங்கத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றார் தயாரிப்பாளர் சூர்யா. நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் அன்று பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்தால் படம் கவனத்திற்கு உள்ளாகாமல் போய்விடும். அதனால் பட்ஜெட் படங்கள் வெளியிட அதே தேதியில் அனுமதிப்பதில்லை. அந்த அணுகுமுறை தான் தமிழ் படம் 2-விற்கும் கடைபிடிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்க விதிமுறைகளை தமிழ் படம் 2 தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை நிச்சயிப்பதில் கடைப்பிடிக்கவில்லை. பிரம்மாண்ட பட்ஜெட் படம் வருகின்ற அன்று, பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் வருவதால் இரு தரப்புக்கும் நஷ்டம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியும் தமிழ் படம் 2 தயாரிப்பாளர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். எதிர்காலத்தில் சங்கவிதிமுறைகளுக்கு உட்பட்டு இவர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார். தமிழ் படம் 2 சங்க விதிமுறைகளை மீறியும், கடைக்குட்டி சிங்கம் விதிமுறைகளுக்கு உட்பட்டும் ரிலீஸ் ஆகிறது என்றார்.

-இராமானுஜம்

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon