தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளை பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து மீட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கலியாவூரில் நேற்று (ஜூலை 10) தாமிரபரணி ஆற்றில் சுமார் 200 மாடுகள் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தன. அப்போது, நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென்று அதிகரித்தது. இதனால் மாடுகள் ஆற்றுக்குள் முளைத்திருக்கும் அமலை செடிகளில் சிக்கிக்கொண்டன.
மீட்புப் பணிக்கு குறைந்த ஆட்களே இருந்த காரணத்தால், ஆற்றின் நீர் வரத்தைக் குறைக்கும் வகையில் மருதூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் வரை 100க்கும் மேற்பட்ட மாடுகளை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள மாடுகளை மீட்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் அமலை செடிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மீட்பு பணி அதிகாரிகளுடன் கால்நடை மருத்துவ குழுவும், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.