மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தமிழகத்தில் அம்மா: ஆந்திராவில் அண்ணா!

தமிழகத்தில் அம்மா: ஆந்திராவில் அண்ணா!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போல, ஆந்திராவில் அண்ணா கேண்டீனை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார்.

மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகத்தை கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னையில் துவங்கி வைத்தார். இங்கு இட்லி 1ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தின் மூலம் நாள்தோறும் பலதரப்பட்ட மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இதுபோலவே பெங்களூருவில் இந்திரா கேண்டீன் கொண்டுவரப்பட்டது. ராஜஸ்தானிலும் மலிவு விலை உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மலிவு விலையில் உணவு வழங்கும் உணவகத்தினை அண்ணா கேண்டீன் என்ற பெயரில் விஜயவாடா வித்தியாதரபுரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூலை 11) திறந்து வைத்தார். முதற்கட்டமாக 35 நகராட்சிகளில் 100 அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. கேண்டீனில் சிற்றுண்டி 5 ரூபாய்க்கும் ( 3இட்லி/ 3 பூரி/ உப்புமா), மதிய உணவு 15ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இது குறித்து அம்மாநில அமைச்சர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சர்வதேசத் தரத்தில் இருக்கும். இதனால் நாள் ஒன்றுக்கு 2.15லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலின்போது தெலுங்கு தேசம் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் போல, அண்ணா கேண்டீன் திறக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். 2015-16ஆம் ஆண்டுக்கான ஆந்திர பட்ஜெட்டில் அண்ணா அம்ருத ஹஸ்தம் திட்டத்துக்காக 104 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதன்படி 110 நகராட்சிகளில் 203 அண்ணா கேண்டீன்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்டமாக 143 கேண்டீன்கள் திறக்கப்படவுள்ளன.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon