மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு தடை!

 மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு தடை!

காவல்துறை பெண் ஆய்வாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு ஆய்வாளராக செல்வகுமாரி பணியாற்றி வந்தார். அப்போது, வரதட்சணை புகார் ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டு, பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்தார்.

இதையடுத்து, பெண்ணின் கணவர், காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், விசாரணை என்ற பெயரில் தன்னை ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் நிற்க வைத்தும், அலைக்கழித்தும் ஆய்வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் செல்வகுமாரி மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். அந்த தொகையை ஆய்வாளரிடமிருந்து வசூலித்து கொள்ள உத்தரவிட்டது. அவர் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கலாம் என மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் செல்வகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உள்நோக்கத்துடன் தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் சட்ட ரீதியாகவே விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், தன் மீதான மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனித உரிமை ஆணைய உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon