மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சிலை கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை!

சிலை கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை!

தமிழக கோவில் சிலைகள் திருட்டு போவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது என்றும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிலைகளை பாதுகாப்பதற்காக இந்து அறநிலையத் துறை தனி அமைப்பை உருவாக்குவது, சிலை திருட்டை தடுப்பது, சிலை மீட்பது உள்ளிட்ட 21 உத்தரவுகளைப் பிறபித்திருந்தது. இதன்படி, ஐஜி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று (ஜூலை 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆகியோர் ஆஜராகாதக் காரணத்தினால், வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இதையடுத்து, நாகை கோனேரிராஜபுரம் கோவிலில் அன்னபூரணி சிலை மாயமாகி விட்டதாகவும், நடராஜர் உள்ளிட்ட உற்சவர் சிலைகள் பாதுகாப்பு இல்லாத அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் அண்ணாமலையார் கோவில், ரெங்கநாதர் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி மகாதேவன் சைவம், வைணவம் எனக் கலாச்சாரமும், பண்பாடும் தழைத்தோங்கும் தமிழகத்தில், தொடர் சிலை திருட்டு சம்பவங்களை நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது என்றார். தமிழகத்தில் சிலைகள் திருட்டு தொடர்வது என்பது தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது என நீதிபதி மகாதேவன் வேதனைத் தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, சிலைகளைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon