மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை!

சினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை!

அம்பலவாணன்

ஊடகத் தொடர்பாளர்கள் பற்றிய தொடர்- 4

பத்திரிகையாளர்களுக்கும் - திரைக்கலைஞர்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இருப்பதையே இரு தரப்பும் விரும்புவார்கள். தமிழகத்தில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளப் படங்களும் சென்னை ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்டு வந்தன.

திரைப்படத் தொழில் முழு வேகத்துடன் வளரத் தொடங்கிய 1950களில் படப்பிடிப்பு, அது பற்றிய செய்திகள் அச்சு ஊடகங்களில் முக்கிய இடம் பெற்றன. எல்லாப் பத்திரிகையாளர்களும் திரைக்கலைஞர்களை சந்தித்து பேட்டி எடுப்பது, அல்லது செய்தி சேகரிப்பது என்பது இயலாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.

அதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்ட போது அதனைப் பேசி நிலைமையை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தும் வேலையைப் படத்தயாரிப்பு நிர்வாகிகளோ அல்லது நடிகர்களின் உதவியாளர்களோ செய்திருக்கிறார்கள். நடிகைகள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள அவர்களின் மேக்கப் மேன், உதவியாளர்களைப் பின் தொடர வேண்டியிருக்கிக்கிறது பத்திரிகையாளர்களுக்கு.

எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவர் மீதும் லட்சுமிகாந்தனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உருவாகவும் காரணம் இரு தரப்புக்கும் ஊடகத் தொடர்புகளை கையாளத் தொழில் ரீதியான சரியான பத்திரிகை தொடர்பாளர்கள் அன்றைய காலகட்டத்தில் இல்லாததே என கூறலாம்.

1957ஆம் வருடம் நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆரின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கதையும், வசனமும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் படம் பற்றிய செய்தியையும், புகைப்படங்களையும் சேகரிக்கச் சென்றவர் தான் புகைப்படக் கலைஞரான ஆனந்தன். நாடோடி மன்னன் படத்தின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் புகைப்படங்கள் பற்றி கேட்டிருக்கிறார் ஆனந்தன்.

அன்றையக் காலகட்டத்தில் படத்தினுடைய செய்தியின் முக்கியத்துவம், அவசரம் கருதி படத்தயாரிப்பாளர், மேனேஜர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு நேரடியாகக் கொண்டு வருவார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் திரைநீதி செல்வம்.

அதே போன்று நாடோடி மன்னன் புகைப்படங்களை பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்காக பிரித்துக் கொண்டிருந்த வீரப்பனிடம் நான் பத்திரிகை அலுவலகங்களுக்குத் தான் போகிறேன்; நான் கொடுத்து விடுகிறேன் என ஆனந்தன் கூற நீண்ட யோசனைக்குப் பின் யார் கொடுத்தால் என்ன என்ற முடிவுக்கு வந்த வீரப்பன் ஆனந்தனிடம் புகைப்படங்களை வழங்கினார். அப்போது உருவானது தான் பத்திரிகை தொடர்பாளர்கள் என்கிற புதிய தொழில்.

இது சட்டபூர்வமாகவும், கௌரவமாகவும் மாற அடித்தளமிட்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

.

எப்படி......

சனிக்கிழமை..

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon