மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஊழலால் தொழில் துறையில் தமிழகம் சரிவு!

ஊழலால் தொழில் துறையில் தமிழகம் சரிவு!

ஊழல் காரணமாக தொழில் துறையில் தமிழகம் பின் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ், “ஊழல் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும்” என்றும் கூறியுள்ளார்.

தொழில் தொடங்குவதற்கு மாநில அரசுகள் மேற்கொண்ட தொழில் சீர்திருத்தங்கள் அடிப்படையில் தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலக வங்கி மற்றும் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை சார்பிலான வருடாந்திர பட்டியல் நேற்று (ஜூலை 10) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழகம் 15ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 18ஆவது இடத்தில் தமிழகம் இருந்த நிலையில், இந்தாண்டு 3 இடங்கள் முன்னேறி 15 ஆவது இடத்தை பிடித்துள்ளது. எனினும் முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 11) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ இந்திய அரசு கொடுக்கும் அறிக்கை என்பது உண்மையாக இருக்கும். ஆனால், கன்சல்டென்சி மூலம் வரும் தகவல்கள் உண்மைப்பூர்வமானதாக இருக்காது. அகில இந்திய அளவில் இருக்கின்ற மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தகவல்கள் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. யாரோ ஒருவர் கொடுக்கும் தகவல்களை வைத்து குற்றம் சாட்டக்கூடாது. அதிகமானவர்கள் தொழில் செய்யும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. தற்போதுக்கூட சியட் டயர் தொழிற்சாலைக்குத் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஊழல் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் தொழில் வளர்ச்சியில் வளரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக என்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.

கடந்த ஆண்டு தமிழகம் 18-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது சில இடங்கள் முன்னேறியுள்ளது என்றாலும் கூட, இது போதுமானதல்ல. இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்து தமிழ்நாடு, 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலிலும் அதே இடத்தில் இருந்தால் மட்டுமே தொழில்துறை முன்னேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இப்பட்டியலில் இதுவரை முதல் 10 இடங்களை தமிழகம் பிடிக்க முடியாதது வெட்கித்தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “ஆந்திரம் 98.42% சீர்திருத்தங்களை செய்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழகம் 90.68% சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால் தான் 15ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர்திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத் தவிர வேறல்ல” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன என்று தெரிவித்துள்ள அவர், “தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர். பினாமி ஆட்சியாளர்களின் ஊழல் ஓயாது என்பதால் தொழில் முதலீட்டை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகத்தின் பின்னடைவும் தொடரும்.

புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29.85% வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன்களை தமிழகம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அப்போது தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப்போவதில்லை. எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும்”என்று தெரிவித்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon