மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஹெல்மெட்டுக்கு வித்தியாசமான பிரச்சாரம்!

ஹெல்மெட்டுக்கு வித்தியாசமான பிரச்சாரம்!

பெங்களூருவில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று, பொதுமக்களுக்கு விசித்திரமான முறையில் போக்குவரத்து காவல்துறையினர்பிரச்சாரம் செய்துள்ளனர்.

தினந்தோறும் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கவும் அரசு சட்டங்கள் இயற்றி வருகிறது. சட்டத்தை மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்களிடம் காவல்துறையினர் அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பதும் வழக்கம்.

அவ்வகையில், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பிரச்சாரத்தில், கன்னட நடிகரான விரேஷ் மட்டாவுக்கு எமதர்ம ராஜா வேஷமிட்டு சாலையில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி அவருக்கு எமன் பூக்கள் கொடுத்து அறிவுரை வழங்குவது போன்று பிரச்சாரம் செய்தனர்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் அனுபம் அகர்வால் கூறுகையில், “ஜூலை மாதம் போக்குவரத்து பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை உணர்த்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

இந்த வருடத்தில் ஜூன் மாதம் வரை 2336 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon