மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

மணல் கடத்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மணல் கடத்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம் சங்கரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க கோரித் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதியில் சங்கரபரணி ஆறு உள்ளது. தினந்தோறும் இந்த ஆற்றில் 500 மாட்டு வண்டிகள் மணல் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இந்த ஆற்றில் சட்ட விரோதமான மணல் குவாரியும் செயல்பட்டு வருகின்றது.

இதைத் தடுக்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மதுரை வீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சில விதிமுறைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை எந்த உத்தரவும் பின்பற்றாமல் தொடர்ந்து அரசு அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் பொதுமக்களின் புகார்கள் மீதும் நடவடிக்கையும் எடுப்பதில்லை என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொடர்பான உண்மை நிலை தாங்கள் அறிந்ததே, எனவே இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon