மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ரொனால்டோவின் உணர்வுபூர்வமான கடிதம்!

ரொனால்டோவின் உணர்வுபூர்வமான கடிதம்!

‘ரியல் மேட்ரிட்டில் நான் இருந்த 9 வருடங்களும், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள்’ என்று டைப் செய்யச்சொல்லி தனது உதவியாளரிடம் கூறியபோது கிறிஸ்டியானா ரொனால்டோ அனுபவித்த உணர்வினை, தற்போது உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஸ்பானிஷ் லீக் கால்பந்து தொடரின் ரியல் மேட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியன் தொடரில் இடம்பெற்றுள்ள ஜுவெண்டஸ் அணிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு செல்கிறார் ரொனால்டோ. இந்தத் தகவலை, ரியல் மேட்ரிட் அணி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் உறுதி செய்திருக்கிறது.

இங்கிலாந்து லீக் கால்பந்து தொடரின் மான்செஸ்டர் யுனெடட் அணியிலிருந்து வெளியேறி, ரியல் மேட்ரிட் அணியில் 2008ஆம் ஆண்டு சேர்ந்தபோது ரொக்கார்ட் பிரேக்கிங் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விலைபோனது போலவே(106 மில்லியன் டாலர்) இப்போதும் ஜுவெண்டஸ் அணியில் சேர்ந்திருப்பதற்கு, கிட்டத்தட்ட 117 மில்லியன் டாலர் விலை பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

எவ்வளவு பணத்துக்கு விலை பேசப்பட்டிருக்கிறார் ரொனால்டோ என்ற தகவல் குறித்த உறுதியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனை விரைவில் ரொனால்டோ விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ரொனால்டோ.

ரியல் மேட்ரிட் அணியிலிருந்து ரொனால்டோ விலகும் செய்தி அறியும்போது, எவ்விதத்திலும் ரசிக மனம் புண்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தனது கடிதத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார். அந்த கடிதத்தின் தமிழ் வடிவம் கீழே.

ரியல் மேட்ரிட்டில் நான் இருந்த 9 வருடங்களும், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள். இந்த கிளப் குறித்த நேர்மையான உணர்வுகள் மட்டுமே என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன. எனக்குக் காட்டப்பட்ட அன்பு மற்றும் அரவணைப்பு ஆகியவற்றுக்கு என்னால் நன்றி மட்டும் தான் கூறமுடியும். எப்படியிருந்தாலும், என் வாழ்வின் புதிய சுழற்சியைத் தொடங்குவதற்கான நேரம் இது என்பதை உணர்ந்ததால் தான் என் டிரான்ஸ்ஃபர் கடிதத்தை ஏற்றுக்கொள்ளும்படி கிளப் நிர்வாகிகளிடம் நான் கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அனைவரும்; முக்கியமாக என் ரசிகர்களும் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

நிச்சயமாகவே இது என் சிறந்த 9 வருடங்களாக இருக்கும். அந்த 9 வருடங்களும் தனித்துவமானவை. புத்துணர்ச்சியுடன் நான் கழித்த 9 வருடங்களை நினைத்துப் பார்க்கும்போது, எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் அவை சவால் நிறைந்ததாக இருந்ததை உணர்கிறேன். அப்படி எவ்வளவு யோசித்தாலும், நான் இங்கு இருந்தவரையில் பெற்ற மகிழ்ச்சியை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அளவுக்கு தனித்துவமானதாக நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள்.

களத்திலும் சரி, ஓய்வெடுத்த உடைமாற்றும் அறையிலும் சரி எனக்குக் கிடைத்தது சிறந்த அணி. அவர்களது அன்பான அரவணைப்பும், கட்டுக்கடங்காத ரசிகக் கூட்டத்தின் வரவேற்பும் சேர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து மூன்று முறையும், ஐந்து வருடத்தில் நான்கு முறையும் வெல்ல வைத்தது. இவர்களோடு இணைந்திருந்தபோது, தனிப்பட்ட முறையிலும் நான் எல்லா விதத்திலும் திருப்தியடைந்ததை நான் வென்ற நான்கு பலான் டி’ ஆர் விருதுகளும், மூன்று கோல்டன் பூட் விருதுகளுமே உணர்த்தும். என் வாழ்வின் தலை சிறந்த அணி இதுவாக இருக்கும்.

ரியல் மேட்ரிட் என் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. என் குடும்பம் போல அது மாறிவிட்டதே, தற்போது நான் நன்றி சொல்வதற்கான முக்கிய காரணம். என் கிளப்புக்கு நன்றி; அதன் தலைவர், இயக்குநர், என் சக வீரர்கள், குழுவுக்கு உதவியாக இருந்த மருத்துவர்கள் மற்றும் வேலையாட்கள் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் போதாது. அதுபோலவே ஸ்பானிஷ் கால்பந்தாட்ட லீகுக்கும் நன்றி. இந்த 9 சிறந்த வருடங்களிலும் உலகின் தலைசிறந்த வீரர்களை என் முன்னே நான் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மரியாதையும், அங்கீகாரமும் எப்போதும் உண்டு.

என் கால்பந்தாட்ட வாழ்வின் புதிய களத்தை நான் தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். ஆனால், நான் அணிந்த உடை, அதில் பொறிக்கப்பட்டிருந்த லோகோ, என்னை எப்போதும் ஆரவாரத்துடன் வரவேற்ற சாண்டியாகோ பெர்னாபு ஸ்டேடியம் ஆகிய அனைத்தும் நான் எங்கு சென்றாலும் என்னுடையதாகவே இருக்கும்.

அனைவருக்கும் நன்றி. 9 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக நான் சொன்ன அந்த வார்த்தை ‘ஹாலா மேட்ரிட்’

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon