மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ராகுல் - ரஞ்சித் சந்திப்பு: ரஜினிக்காகவா?

ராகுல் - ரஞ்சித் சந்திப்பு: ரஜினிக்காகவா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று (ஜூலை 10) தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகத்தில் அரசியல் ரீதியான விவாதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

இன்று காலை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் சினிமாக்களின் இயக்குனரான பா.ரஞ்சித்தையும், நடிகர் கலையரசனையும் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினேன். அரசியல், சினிமா, சமூகம் என்று பல்வேறு தளங்களில் பேசினோம். இந்த உரையாடல் மகிழ்ச்சிகரமாக இருந்தது, இதுபோன்ற உரையாடல்களை தொடர விரும்புகிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சந்திப்பை ராகுல் காந்தி வெளிப்படுத்திய பிறகு ரஞ்சித்தும் தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

“ராகுல் காந்தியை சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. நாட்டில் நிலவும் சாதி, மத பாரபட்சங்கள் பற்றியும், மதச்சார்பற்ற நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியமான அச்சுறுத்தல்கள் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதித்தோம். இந்த சந்திப்புக்காக ராகுல் காந்திக்கு நன்றிகள். எங்கள் சந்திப்பில் பேசியவை செயல்வடிவம் பெறும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். பல்வேறுபட்ட கருத்தியல் சார்ந்தவர்களையும் தேசியத் தலைவராக இருந்துகொண்டு சந்திக்கும் ராகுல் காந்தியின் பண்பு என்னை உற்சாகப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ரஞ்சித்.

கடந்த மாதம் ராகுல் காந்தியை நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். இப்போது பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஞ்சித் சந்திப்புக்குப் பின்னணியில் ரஜினிகாந்த் இருக்கலாமோ என்று ஓர் ஐயம் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்தது. ஆனால் ரஞ்சித் தனது பதிவில் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகள் பற்றி பேசியதாகக் கூறியிருக்கிறார். எனவே ஆன்மிக அரசியல் பேசிவரும் ரஜினிக்காக ரஞ்சித் ராகுல்காந்தியை சந்தித்திருப்பாரா என்கிற கருத்தும் காங்கிரசுக்குள்ளேயே உலவுகிறது.

பாஜக தலைமை ரஜினியை தனது கூட்டணியில் இணைத்துக் கொள்ள முயல்வதாக தகவல்கள் வரும் நிலையில், ரஜினிக்கு மிகவும் நெருங்கிய ரஞ்சித் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்திருப்பதன் மூலம் பல கேள்விகள் எழுகின்றன.

இந்த யூகங்களுக்கு இடையே, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ரஞ்சித் கேட்டதாகவும், அவர்களை விடுதலை செய்ய தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி சொன்னதாகவும் இன்று காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

தமிழகத்தில் இருந்து சமீபகாலமாக முக்கியமான ஆளுமைகளை ராகுல் காந்தி சந்தித்துவருவது அரசியல் ரீதியாகவா அல்லது அரசியலுக்கு அப்பாற்பட்டதா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் புள்ளிகள்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon