இயக்குநர் பாரதிராஜா தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில் முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்குத் தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.
இதுதொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி மே 23ஆம் தேதி உத்தரவிட்டார்.
மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று (ஜூலை 11) நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குநர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகின்றன. அதற்கெல்லாம் செல்லமுடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா, நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை” என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்யாமல் புதிய மனுவாகத் தாக்கல் செய்ததும் தவறு என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பாரதிராஜாவின் மனுவுக்கு புகார் தாரரான நாராயணன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.